குன்னூர்: குன்னூர் மலைப்பாதையின் இடையே பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தாததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து குன்னூர் செல்லும் வாகனங்களில் ‘லிப்ட்’ கேட்டு பயணிகள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளி பகுதிகளான மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மாவட்டத்திற்குள் பல்வேறு கிராம பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சமவெளி பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ‘எக்ஸ்பிரஸ் பேருந்துகள்’ எனவும், இந்த பேருந்துகள் இடைப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நிற்காது எனவும் பேருந்து நடத்துனர்கள் கூறி வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையேயான மலைப்பாதையில் காட்டேரி பூங்கா, கே.என்.ஆர், குரும்பாடி, புதுக்காடு போன்று பல்வேறு பேருந்து நிறுத்தங்கள் உள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குன்னூர் நகர பகுதிகளுக்கு வருகின்றனர். ஆனால் குன்னூர் செல்வதற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்ததில் சுமார் 2 மணி நேரமாக பேருந்திற்கு காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 2 மணி நேரத்தில் மட்டும் குன்னூர், உதகை, கூடலூர் செல்லும் பேருந்துகள் என 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்வதாகவும், பேருந்தை கையை காட்டி நிறுத்தினாலும், நிறுத்தாமல் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து குரும்பாடி பகுதியில் வசிக்கும் பெண் பயணி கூறுகையில் ‘‘2 மணி நேரமாக காத்திருந்து பார்த்த பின் நாங்களே மற்ற வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்கிறோம். அதுமட்டுமின்றி குன்னூர் சென்று பொருட்கள் வாங்கி வரும்போது மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய பேருந்து நடத்துனர்கள் கூட எக்ஸ்பிரஸ் பேருந்துகள் எனக்கூறி இடைப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் இறங்குபவர்கள் பேருந்தில் ஏறக்கூடாது என கூறுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக இடைப்பட்ட நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்த வேண்டும் என்றும், அல்லது உள்ளூர் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பர்லியார் வரை சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் மலைப்பாதையின் இடையே பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர்கள்: லிப்ட் கேட்டு செல்லும் பயணிகள் appeared first on Dinakaran.