தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் 4 வகை கள்ளிச்செடி, 56 வகை சக்குலன்ஸ் தாவரம் உற்பத்தி


ஊட்டி: ஊட்டி அருகே தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் 4 வகை கள்ளிச்செடிகள், 56 வகையான சக்குலன்ஸ் வகை அலங்கார செடிகள் உற்பத்தி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள், பண்ணைகள் அதிகளவு உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் தொட்டபெட்டா அருகில் தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன. இந்த பூங்கா பூங்காவிற்கு நாள்தோறும் பல ஆயிரம் சென்று வருகின்றனர். இதனால் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பூங்காக்களில் ஆண்டுதோறும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொட்டபெட்டா தேயிலை பூங்காவில், அழகான தேயிலைத்தோட்டம், புல்வெளிகள், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அழகிய இருக்கைகள் கொண்ட நிழற்குடைகள், விளையாட்டு சாதனங்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். அதேபோல், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள புல் மைதானங்களில் விளையாடியும் மகிழ்கின்றனர்.
இந்நிலையில், பூங்காவில் கோடை சீசனுக்காக பல்வேறு மலர் செடிகள் மற்றும் அலங்கார தாவரங்கள் உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்கா முழுவதிலும் உள்ள நர்சரியில் பல லட்சம் மலர் நாற்றுகள், அலங்கார தாவரங்கள், இதர தாவரங்கள் உற்பத்தி துவங்கியுள்ளன.

பூங்கா நர்சரியில் தற்போது நான்கு வகையான கேக்டஸ் எனப்படும் கள்ளி செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர 56 வகையான சக்குலன்ஸ் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த செடிகள் தயாரானவுடன் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் அலங்கரித்து வைக்கப்பட உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

The post தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் 4 வகை கள்ளிச்செடி, 56 வகை சக்குலன்ஸ் தாவரம் உற்பத்தி appeared first on Dinakaran.

Related Stories: