உமர் அப்துல்லா பேச்சு எதிரொலி காங். ஆட்சி வந்ததும் இவிஎம்களுக்கு முடிவு: எம்பிக்கள் கருத்து

புதுடெல்லி: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அளித்த சிறப்பு பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து காங்கிரசின் ஆட்சேபனைகளை நிராகரித்தார். வெற்றி பெறும் போது கொண்டாடுவதும், தோற்றால் இவிஎம் மீது சந்தேகம் இருப்பதாக கூறுவதும் ஏற்க முடியாதது என கூறியிருந்தார். இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு எம்பிக்கள் நேற்று கருத்து தெரிவித்தனர்.

ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘மம்தா, சரத் பவார், அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இதையே கூறுகிறார்கள். எனவே காங்கிரஸ் மட்டும் இவிஎம் மீது குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இப்போதாவது காங்கிரஸ் தனது தவறை உணர வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியை விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார். சமாஜ்வாடி, காங்கிரஸ் எம்பிக்கள் இவிஎம்களுக்கு எப்போதும் எதிராக இருப்பதாக பேசினர். ‘‘நாங்கள் வெற்றி பெற்றாலும் கூட இவிஎம்களை அகற்ற வேண்டும் என்று தான் எப்போதும் கூறுகிறோம். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு முடிவு கட்டும். இவிஎம்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை’’ என காங்கிரஸ் எம்பிக்கள் புனியா, இம்ரான் மசூத் ஆகியோர் கூறினர்.

* முதல்வரானதும் அணுகுமுறையை மாற்றியது ஏன்: காங்.கேள்வி
காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, இந்தியா கூட்டணி மீதான அணுகுமுறையை ஏன் மாற்றிக் கொண்டார் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கூறினார். அவர் கூறுகையில்,’இவிஎம்மிற்கு எதிராக சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு ஆகியவை பேசுகின்றன. ஆனால் காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா உண்மையை சரிபார்க்க வேண்டும். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கூட இவிஎம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரான பிறகு எங்கள் கூட்டாளியிடம் ஏன் இந்த அணுகுமுறை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* எத்தனை இவிஎம்களை ஹேக் செய்ய முடியும்?
மேற்குவங்க முதல்வர் மம்தாவின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் இவிஎம் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில்,’ இவிஎம் மீது குற்றம் சாட்டுபவர்கள் முதலில் எத்தனை இவிஎம்களை ஹேக் செய்ய முடியும் என்பதை தேர்தல் கமிஷன் முன்பு நிரூபித்து காட்ட வேண்டும்’ என்றார்.

The post உமர் அப்துல்லா பேச்சு எதிரொலி காங். ஆட்சி வந்ததும் இவிஎம்களுக்கு முடிவு: எம்பிக்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: