மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகளை வழங்கினார் சென்னை மேயர்

சென்னை: 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவம் குறித்து பயிற்சி அளிக்க ஏதுவாக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகளை (Laptop with LCD Projector) இன்று (16.12.2024) மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையின் சார்பில், நோய்த்தடுப்பு சிகிச்சை வசதிகள் மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய பல்வேறு சேவைகள், பூச்சித்தடுப்பு நடவடிக்கைகள், பல்வேறு தேசிய நலத்திட்டங்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வீடற்றோர்களுக்கான காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மேயரின் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவம் குறித்து பயிற்சிகள் அளிப்பதற்காக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகள் (Laptop with LCD Projector) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலங்களிலும் செயல்பட்டு வரும் நகர்ப்புர சமுதாய நல மையங்கள் (UCHC), நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்களில் (UHWC) பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தாய் சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆய்வக நடைமுறைகள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. பயிற்சி அளிக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இப்பயிற்சியை மண்டல அளவிலேயே சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலர் மூலம் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறான பயிற்சிகள் அளிக்க ஏதுவாக 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்கும் ரூ.30 இலட்சம் மதிப்பில் மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகள் (Laptop with LCD Projector) கொள்முதல் செய்யப்பட்டு இன்று மேயரால் வழங்கப்பட்டது. இதன் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புர சமுதாய நல மையங்கள், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்களின் மருத்துவ தரம் உயர்த்தப்படுவதுடன், ஏழை, எளிய மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற இயலும்.

இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகளை வழங்கினார் சென்னை மேயர் appeared first on Dinakaran.

Related Stories: