சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு
கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லமான மும்பை கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் அதன் தோட்டாக்களில் ஒன்று சல்மானின் வீட்டின் சுவரைத் துளைத்தது. மற்றொரு தோட்டா சல்மான் கானின் வீட்டில் நிறுவப்பட்டு இருந்த வலையைத் துளைத்து, அவரது வீட்டின் அறையின் சுவரை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, குஜராத் சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவர் தனக்காக தனியார் பாதுகாப்பு படையையும் அருகில் வைத்துள்ளார். தான் வெளியே செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உயர்ரக கார்களையும் பயன்படுத்தி வருகிறார்.
‘அடிக்காதீங்க’ என்று அலறிய ரவீனா டாண்டன்
கடந்த ஜனவரியில் மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், அதிகாலை நேரத்தில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார், மும்பை கார் ரோடு பகுதியில் வந்தபோது ரோட்டை கடக்க முயன்ற மூன்று பெண்கள்மீது மோதியது. இதில் அப்பெண்கள் லேசாக காயம் அடைந்தனர். உடனே காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். அதோடு அவர்களை பிடித்து தள்ளினார். அந்நேரம் காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும் டிரைவருடன் சேர்ந்து கொண்டு சாலையை கடக்க முயன்ற பெண்ணை தாக்கியதாக கூறப்பட்டது. அதற்குள் உள்ளூர் மக்கள் நடிகையை சூழ்ந்து கொண்டு ரவீணாவை தாக்க முயன்றனர். உடனே அவர் ‘தயவு செய்து என்னை அடிக்காதீர்கள், என்னை தள்ளாதீர்கள்’’ என்று கெஞ்சினார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் தான் பிரச்னை தீர்ந்தது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இவ்விவகாரத்தின் போது டிரைவரும், நடிகை ரவீணா டாண்டனும் குடிபோதையில் காரில் இருந்து வெளியில் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ரவீணா மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின.
புற்றுநோயால் பூனம் பாண்டே மரணம்?
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக அவரது மேலாளர் அறிவித்தார். அதில், ‘இந்தக் காலை எங்களுக்கு கடினமான ஒன்று. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த துயர நேரத்தில், நாங்கள் பகிர்ந்த எல்லாவற்றிலும் அவரை அன்புடன் நினைவுகூரும்போது தனி உரிமையைக் கோருவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் நடிகை பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாகவும், அவர் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக இதுபோன்ற பதிவை வெளியிட்டதாகவும் மறுபதிவு போடப்பட்டது. இருந்தாலும் மரணம் போன்ற விசயங்களில், இதுபோன்ற செய்திகளை வெளியிடலாமா? என்று கூறி பூனம் பாண்டேவை பலரும் திட்டித் தீர்த்தனர். அவர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.
அல்லு அர்ஜுன் கைது
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ெதலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா – 2’ திரைப்படம் ஐதராபாத் தியேட்டர் ஒன்றில் பிரீமியர் ஷோ வெளியானது. அந்த படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜூன் வந்தார். அவரை பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றவர்களில் கூட்ட நெரிசல் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது ஐதராபாத் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அவரது வழக்கு திரும்பப் பெறப்பட்டு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதனால் கிட்டத்தட்ட 14 மணி நேர சிறைவாசம் இருக்க வேண்டிய நிலை அல்லு அர்ஜூனுக்கு ஏற்பட்டது. பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் – நயன்தாரா மோதல்
கடந்த நவம்பர் மாதம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒரு டாக்குமெண்ட்ரி வெளியானது. இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தடையில்லா சான்று பெறுவதற்காக நயன்தாரா அனுமதி கோரியிருந்தார். ஆனால், அதற்கு அனுமதி தரப்படாததால் தனுஷூக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பேசுபொருளானது. இந்நிலையில் நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி இருந்தனர். இதனை அடுத்து அனுமதி இன்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் காட்சிகளை பயன்படுத்த தடைவிதிக்க கோரியும் வொண்டர்பார் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கில் ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.
The post 2024ல் சர்ச்சையில் சிக்கிய சினிமா பிரபலங்கள்; துப்பாக்கி சூடு, தர்மஅடி, சிறை, போலி மரணம், பழிவாங்கல்: 2025ம் ஆண்டு பிறக்க சில நாட்களே உள்ள நிலையில் விவாதம் appeared first on Dinakaran.