ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட உள்ளது. இதுதவிர பழுதடைந்துள்ள பெரணி இல்லம் சீரமைக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இதில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக விளங்குகிறது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டியில் உள்ள பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இப்பூங்கா 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தாவரங்கள், மரங்களை கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஊட்டியில் அறிமுகம் செய்தனர்.
ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வகைகளைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் செழித்து வளர்ந்து தற்போதும் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவின் பல்வேறு இடங்களிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதுதவிர மூன்று கண்ணாடி மாளிகைகள் உள்ளன. இவற்றில் பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் மற்றும் பல்வேறு வண்ண வண்ண மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 176 ஆண்டு பழமை வாய்ந்த இப்பூங்காவிற்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஊட்டியின் அடையாளமாக விளங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை பயன்படுத்தி பூங்காவில் நடைபாதை, நவீன கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு பணிகள் அடுத்த ஆண்டு கோடை சீசனுக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘‘ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியை கொண்டு தாவரவியல் பூங்காவில் புதிதாக ஒரு கண்ணாடி மாளிகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அலங்கார மாடங்கள் அமைந்துள்ள இடத்தில் உள்ள பெரணி தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை பழுதடைந்தும், கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கண்ணாடி மாளிகை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மாளிகையும் சீரமைக்கப்பட உள்ளது. இதுதவிர அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் கழிப்பிட வசதிகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் கூடுதல் நிதி பெறப்பட்டு இதர வசதிகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post 176 ஆண்டு பழமையான தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி மதிப்பில் விரைவில் புதுப்பொலிவு: புதிதாக கண்ணாடி மாளிகை அமைகிறது appeared first on Dinakaran.