HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க நிறுவனங்கள்!!

டெல்லி : இந்தியாவில் HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் மூக் இங்க் ரூ. 4.2 கோடி லஞ்சம் கொடுத்தது ஆதாரங்களுடன் அம்பலமாகி உள்ளது. மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற கருவியை மத்திய ரயில்வேவுக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் பெற 2020ல் அமெரிக்காவின் மூக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. 2020-க்கு முன்பு வரை மத்திய ரயில்வேவுக்கு கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் மூக் நிறுவனம் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து, ஒப்பந்த தொகையில் 10% கமிஷன் தருவதாக இடைத்தரகர் ஒருவருடன் ஜூலையில் மூக் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

10% கமிஷன் தர ஒப்புக்கொண்ட அடுத்த மாதமே மூக் நிறுவனம், ஒப்பந்த நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2020 செப்டம்பரில் தெற்கு மத்திய ரயில்வேயிடம் இருந்து மூக் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்திடம் ஒப்புக்கொண்டது மூக் இங்க் நிறுவனம். லஞ்சம் கொடுத்ததற்காக மூக் நிறுவனத்துக்கு கடந்த அக்.11-ம் தேதி ரூ.14 கோடி அபராதம் விதித்தது அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையம். இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க மூக் இங்க் நிறுவனம் 3 மடங்கு அபராதம் செலுத்தியுள்ளது.

இதனிடையே 2021 நவம்பரில் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது மூக் நிறுவனம். மூக் இங்க் நிறுவனம் மட்டுமின்றி பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கள் நிறுவனமும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தது தெரிய வந்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி நாடுகளின் அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது. ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்ட ஆரக்கள் நிறுவனத்துக்கு ரூ.193 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2009-2011 காலகட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த அல்பிமாரல் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அதானி நிறுவனம் இந்தியாவில் ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றது அம்பலமானது. அதானி விவகாரம் ஓய்வதற்குள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது? என்று ஒன்றிய அரசுக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க நிறுவனங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: