மார்கழி மாதத்தின் தெய்வீக சக்தியை உலகிற்கு உணர்த்துவதற்காகவே, பகவான் தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின்போது, பகவத் கீதையில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்….!” என்று அருளினார். இதைவிட, வேறு என்ன பெருமை அல்லது உயர்வு வேண்டும் மார்கழி மாதத்திற்கு….?இத்தகைய தன்னிகரற்ற மார்கழி மாதத்தில் நிகழவிருக்கும் விசேஷ, புண்ணிய தினங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மார்கழி 1 (16-12-2024): தனுர் மாதப் பூஜை ஆரம்பம். அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய கோதை – ஆண்டாளின் திருப்பாவை – 30 திவ்ய பாசுரங்களையும் பக்தி, சிரத்தையுடன் திருக்கோயிலிலோ அல்லது அவரவர் வீட்டுப் பூஜையறையிலோ சொன்னாலோ அல்லது ஒலி நாடாக்களில் கேட்டாலோ கன்னியருக்கு கண் நிறைந்த கணவன் வாய்ப்பது உறுதி. மேலும் திருவெம்பாவை சொல்லி, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.
மார்கழி 2 (17-12-2024): திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷியின் அவதார தினம். திருவண்ணாமலைக்குச் சென்று, தரிசிப்பது விசேஷ புண்ணிய பலனைத் தரும்.
மார்கழி 7, 8 (22 மற்றும் 23-12-2024): சங்கராஷ்டமி – தெரிந்தோ, தெரியாமலோ வர்த்தகத்தில் பாபங்களைச் செய்திருந்தால், அவையனைத்தும் அகன்று, பகை விலகி, தொழில் அபிவிருத்தியடைந்து, மென்மேலும் பல்கிப் பெருகும்.
மார்கழி 12 (27-12-2024): கலியின் கண்கண்ட தெய்வமான, காஞ்சி காமகோடி பீடம் பூஜ்ய ஸ்ரீ மகா பெரியவாள் ஆராதனைத் தினம்.
மார்கழி 13 (28-12-2024): சனிப் பிரதோஷம், விரதமிருந்து மாலையில் சனி பகவானை தரிசிப்பது கிரக தோஷங்களைப் போக்கும்.
மார்கழி 14 (29-12-2024): மாத சிவராத்திரி. இன்று விரதமிருந்து, சிவபெருமானையும், அம்பிகையையும் பூஜிப்பது அனைத்து பாவங்களையும் போக்கி, நல்வாழ்வு அருளும். நம்பெருமாள் – திருவரங்கத்து இன்னமுதன் மீது திருமாலை, திருப்பள்ளி எழுச்சி பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் திருநட்சத்திரம்.
மார்கழி 15 (30-12-2024): ஸ்ரீஅனுமத் ஜெயந்தி. ராம பக்த அனுமானின் அவதாரப் புண்ணிய தினம். இன்றைய தினம், ராமாயணத்தின், ஸ்ரீசுந்தரகாண்டம் – வாசித்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள். படித்த பிறகு, ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சாற்றத் தவற வேண்டாம். மேலும், திருமாலின் தசாவதாரத்தில் ஆறாவது அவதாரமாகிய பரசுராமரின் பராக்கிரமத்திற்கு இணையானதும், அனைத்துக் கலைகளுக்கும் ஆதிபத்தியம் கொண்டவரும், இன்பங்களுக்கு காரகத்துவம் வாய்ந்தவனும், நடன, நாடகக் கலைஞர்களையும், திரைப்படங்களுக்கு ஆதிபத்தியம் கொண்டவனும், நவக்கிரகங்களில் சுக்கிரனின் தோஷங்களை போக்கடிக்கும், தேவிபராசக்தியின், மகாலட்சுமியின் அம்சமான கமலா ஜெயந்தி. இன்றைய தினத்தில் தேவி பாகவதம், தேவி மகாத்மியம், ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் இவற்றில் எது முடிகிறதோ அவற்றைப் பாராயணம் அல்லது பக்தி சிரத்தையுடன் செவியால் கேட்டாலே சகல சம்பத்துக்களுக்கும் அதிபதியாவோம், சத்தியமாக!
மார்கழி 17 (1-1-2025): வளர்பிறை துவங்கி, தேய்பிறைலிருந்து விடுபட்டு, சந்திரன் தோன்றும் முதல் நாளன்று மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரனின் உதயத்தைக் கண்டு தரிசிப்பவர்கள் ஆயிரம் பிறைகளைக் காண்பார்கள் (அதாவது, 80 வயதைக் கடந்தும், ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும்) திகழ்வார்கள் என நவக்கிரக புராணங்கள் முதற்கொண்டு ஏனைய புராணங்களிலும் காணப்படுகிறது. வாசக அன்பர்கள் இந்நன்னாளைப் பயன்படுத்திக்கொண்டு வைய்யத்துள் வாழ்வாங்குவாழப் பிரார்த்திக்கின்றேன்.
மார்கழி 18 (2-1-2025): “திருவோணத்தான் உலகாளும் என்பார்களே!” என்பது ஆழ்வார்களின் தீர்க்க தரிசனம். சிரவண விரதம். இன்று விரதம் இருந்து, திருவேங்கடவனை ஸ்ரீஹயக்ரீவரை பூஜிப்பது மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும்.
மார்கழி 20 (4-1-2025): திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் பாத தரிசனம் கிடைக்கும் அரிய புண்ணிய தினம்.
மார்கழி 21 (5-1-2025): சஷ்டி விரதம். சஷ்டியன்றுதான் ஸ்ரீமுருகப் பெருமான், சிரேயஸையும், ஐஸ்வர்யத்தையும், சேனாதிபத்தியத்தையும் அடைந்ததாக பவிஷ்ய புராணம் கட்டியம் கூறுகிறது. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முருகப் பெருமான், ஏனைய பக்தகோடிகளும் பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய திருவிளையாடல்களைச் செய்தார் என்றே கொள்ள வேண்டும்.
மார்கழி 23 (7-1-2025): பூமிகாரகரான செவ்வாயின் ஆட்சிவீடாகிய மேஷ ராசிக்கு சந்திரனின் பிரவேசம் செய்யும் காலத்தில் அஸ்வினி நட்சத்திரமும் சங்கமிக்கும் இந்நாளையே பௌமாஸ்வினி எனக் கூறுகிறோம். இந்நன்னாளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை, துளசி தளம் கொண்டு துதித்தால், செவ்வாய் தோஷம்அகலுகுவதோடு, நம்மைப் பிடிக்காத எதிரிகளால் ஏவப்பட்ட ஏவல், பில்லி சூனியம் நம்மைத் தாக்காவண்ணம் காத்தருள்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர். இந்நன்னாளில்,
“உக்ரம் வீரம் மகா விஷணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும், ம்ருத்யும் நமாம்யஹம்” எனும் மந்திரத்தை 9 முறைகள் சொன்னால், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர்!
மார்கழி 26 (10-1-2025): வைகுண்ட ஏகாதசி. திருவரங்கம் தரிசனம் விசேஷம்.இன்று பெருமாள் கோயில் சென்று, பக்தகோடிகள் பரமபத வாசலைக் கடந்தால், வாழ்க்கை வண்ணமயமான சொர்க்கமாகத் திகழும். ஏகாதசி விரதமிருப்பவர்களின் முற்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாபங்களனைத்தும் விலகி, இக பரசுகங்களை இனிதே அனுபவித்து, மறுபிறவியில், ஈடிணையற்ற வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று ஏகாதசி மகாத்மியத்தைப் பற்றிக் கூறாத புராணங்களே இல்லை. 8 வயது முதல், 80 வயது வரை உடைய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது.
மார்கழி 27 (11-1-2025): கூடாரவல்லி – இன்றையதினத்தில், தமிழை ஆண்ட ஆண்டாள் பாடிய, “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” என்ற பாசுரத்தைப் பாடினால், தொழிலில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் எதிரிகளற்ற – நல்வாழ்வைப் பெறுவர். மேலும் இன்று, சனிப் பிரதோஷம்.
மார்கழி 27 (11-1-2025): மகா பிரதோஷ விரதம். பகலில் உபவாசமிருந்து, பிரதோஷகாலத்தில், திருக்கோயிருக்குச் சென்று, சாம்பசிவமூர்த்தியை, ரிஷபாரூடராக தரிசனம் செய்தால், தீர்க்க ஆயுள், ஆேராக்கியம், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் தந்தருள்வார் என அனைத்து புராணங்களிலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.
மார்கழி 28 (12-1-2025): ஸ்ரீநடராஜ அபிஷேகம் – இன்றைய தினத்தில் வில்வ தளத்தால் சிவபெருமானை பூஜிப்பது அளவிடற்கரிய புண்ணிய பலனைத் தரவல்லது. சிவபூஜை செய்ய சக்தி – வசதியற்றவர்கள்கூட இரவு முழுதும் உறங்காமல் பெருமானை மனத்தளவில் நினைத்தாலே போதும் மிகுந்த பலன்களை அடைவது திண்ணம் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மார்கழி 29 (13-1-2025): ஆரூத்ரா தரிசனம். இன்றைய தினத்தில் ஸ்ரீநடராஜப் பெருமானை (அதிலும் சிதம்பரம் விசேஷம்) தரிசித்தால், தொழில் சிறக்கும், போட்டிகள் அகலும்; சகல சௌபாக்கியங்களையும் பெற்று உய்வர்! மேலும் இன்று போகிப் பண்டிகை. இந்திர லோகத்தில் வாழும் இந்திரனைப் போல் நாமும் வாழ்ந்திட பழையனக் கழிதலும், புதியனப் புகுதலுமாகிய – நம் மனத்தில் நிறைந்துள்ள (பழைய) அழுக்குகளைக் களைந்து, புதிய நல்லொழுக்கங்களை பதியச் செய்யும் வண்ணமாக, வீட்டிலுள்ள பழைய வேண்டாத பொருட்களனைத்தையும் விலக்கி, சுத்தம் செய்து, மறைந்த மூதாதையோரை வழிபட்டு, அவர்களின் நல்லாசிகளைப் பெறும் நன்னாள். பழையதைக் கழிந்து, புதியவைகளை வைத்துப் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் காலை மணி 11.03 முதல், பகல் 11.58 மணிவரை. அதிலும் பௌர்ணமியும் கூட வருவதால் இன்றைய தினத்தில் உபவாசமிருந்து, மாலையில் சந்திர தரிசனம் செய்து. ஸ்ரீஸத்திய நாராயண பூஜை செய்வித்தால், சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக ஸ்ரீமந் நாராயணனே சத்திய ப்ரமாணம் செய்த தால்தான் இவ் விரதத்திற்கு சத்திய நாராயண பூஜை என்ற காரணப்பெயராயிற்று! இப்பூஜை செய்பவர்களின் அபிலாஷை அனைத்தும் நிறைவேறுவது திண்ணம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா!இனி, இம்மாதத்தின் ராசி பலன்களைப் பார்ப்போம். ஒவ்வொரு ராசியினருக்கும், .2 டிகிரி சுத்தமாக சோடச சதவர்க்கம் எனும் விசேஷ கணித முறை மூலம் கணித்து, எளிய பரிகாரங்களுடன் எமது “தினகரன்”வாசக அன்பர்களுக்கு அளித்துள்ளோம். பரிகாரங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை; எளியவையும்கூட! “பரிகார ரத்னம்” எனும் மிகப் புராதன ஜோதிட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.
The post மாதவத்தோர் தேடிவரும் மார்கழி மாதம்! appeared first on Dinakaran.