சேந்தமங்கலம், டிச.16: கொல்லிமலையில், மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க அனுமதி அளித்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில், தொடர் மழையின் காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால், சீதோசன நிலை மாறி சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. மதியத்தில் இதமான சூழ்நிலை இருந்து வருகிறது. அதிகாலை முதல் காலை 10 மணி வரை மலைப்பாதையில், கடும் பனிமூட்டம் இருந்து வருகிறது. கீழே இருந்து, மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைவான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், அனுமதி வழங்கப்பட்ட மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.
The post மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க மீண்டும் அனுமதி appeared first on Dinakaran.