×

25 ஆண்டுகளுக்கு பின் நடந்த சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வெற்றி

சென்னை: சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் ஒரு குறிப்பிட்ட நபர்கள் பத்திரிகையாளர் மன்றத்தை ஆக்கிரமித்து இருந்தனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல் இருந்தது, பத்திரிகையாளர் அல்லாதவர்களை முறைகேடாக உறுப்பினர்களாக சேர்த்தது, பத்திரிகையாளர் மன்றத்தின் நிதியில் முறைகேடு செய்தது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து தேர்தல் நடத்த கோரி பத்திரிகையாளர்கள் பலர் போராடினர். சட்டப்போராட்டங்களும் நடந்து வந்தன. இந்நிலையில் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் தலைமையில் சிறப்பு வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பழைய உறுப்பினர்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாரதிதாசனை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து, அவர் தலைமையில் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஒரு சிலர் தொடர்ந்த வழக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு பின் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு டிச.15ம் தேதி தேர்தல் நடைபெறும் என நீதிபதி பாரதிதாசன் கடந்த நவ.28ம் தேதி அறிவித்தார். இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளும், 5 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30ம் தேதி முதல் டிச.7ம் தேதி வரை நடந்தது. வேட்பு மனுக்கள் டிச.9ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. டிச.10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி மற்றும் சுயேச்சையாகவும் 44 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று தேர்தல் விறுவிறுப்புடன் நடந்தது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் மொத்தம் 1502 வாக்குகளில் 1371 வாக்குகள் பதிவானது. இது 91.27 சதவீதமாகும். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நீதிக்கான கூட்டணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் (தினகரன்), பொதுச்செயலாளராக அசீப் முகமது (அரண் செய்), பொருளாராக மணிகண்டன் (ஜெயா டிவி), துணை தலைவர்களாக மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மற்றும் சுந்தரபாரதி (புதிய தலைமுறை), இணை செயலாளராக நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக நீதிக்கான கூட்டணியை சேர்ந்த ஸ்டாலின் (புதிய தலைமுறை), அகிலா ஈஸ்வரன் (தி இந்து), பழனிவேல் (பாலிமர் டிவி), விஜயகோபால் (ஏஎன்ஐ) மற்றும் ஒற்றுமை அணியை சேர்ந்த கவாஸ்கர் (தீக்கதிர்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

The post 25 ஆண்டுகளுக்கு பின் நடந்த சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Coalition for Justice ,Chennai Press Club ,Chennai ,Alliance for Justice ,Press Club ,1999 elections ,Chennai Journalists' Forum ,Chennai Sepakkam Omandurar Government Garden ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...