முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்த அனுரகுமார திசநாயகவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், இடதுசாரியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று, இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா வருமாறு அதிபர் திசநாயகவுக்கு அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று, தனது முதல் வெளிநாட்டு பயணமாக அதிபர் திசநாயக 3 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் திசநாயகவை வரவேற்றார். அதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் திசநாயக சந்தித்து பேசினார். பயணத்தின் 2ம் நாளான இன்று அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வரும் திசநாயகவுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி, அதிபர் திசநாயக இடையேயான இருதரப்பு சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்தும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேசுவார் என தெரிகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்தியாவின் எதிர்பார்ப்புகளும் இலங்கை அதிபரிடம் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் திசநாயக, புத்த கயாவுக்கு செல்ல உள்ளார்.

கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற ஜெய்சங்கரை சந்தித்த திசநாயக, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் தங்களுடைய நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்திருந்தார். மகிந்தா மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் இலங்கை சீனா பக்கம் சாய்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவின் நட்பை விரும்புகிறது. மேலும், பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய போது முதல் நாடாக இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இப்படிப்பட்ட சூழலில் இலங்கை அதிபர் திசநாயகவின் இந்திய பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: