ஹாமில்டன்: மூன்றாவது டெஸ்டின் 2வது நாளில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் தீப்பொறி பறந்த பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 143 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில், 2வது இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னுடன், 340 ரன் முன்னிலை பெற்றுள்ளது.நியூசிலாந்து – இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடந்து வருகிறது. முதல் 2 போட்டிகளை வென்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்நிலையில் 3வது டெஸ்ட் நேற்று முன்தினம் ஹாமில்டனில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த சான்ட்னர் 76ல் அவுட்டானார். இதையடுத்து, 347 ரன்னுக்கு நியூசி ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ 4 விக்கெட் எடுத்தார்.
அதனையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து வீரர்களின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. அதனால் இங்கிலாந்து 35.4 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது. பந்து வீச்சில் மிரட்டிய நியூசியின் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.இங்கிலாந்து குறைந்த ரன் எடுத்திருந்ததால், ஃபாலோ ஆன் விளையாட நியூசி பணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்து. மாறாக நியூசி 2வது இன்னிங்சை விளையாட களமிறங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்தது.இன்னும் கைவசம் 7 விக்கெட் எஞ்சியிருக்க, 340 ரன் முன்னிலையுடன் நியூசி வீரர்கள் கேன் வில்லியம்சன் 50, ரச்சின் ரவீந்திரா 2 ரன்னுடன் 2வது இன்னிங்சை இன்று தொடர்கின்றனர். இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் நியூசி மேலும் வலுவான நிலையை எட்டிய பிறகு இன்றே டிக்ளேர் செய்யக் கூடும்.
The post தீப்பொறி பறந்த நியூசி பந்து வீச்சில் சடசடவென சரிந்த விக்கெட்டுகள்: 3வது டெஸ்டில் இங்கிலாந்து பரிதாபம் appeared first on Dinakaran.