டெல்லி சட்டப்பேரவை தேர்தல்ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியீடு: புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில் ஆம் ஆத்மி தற்போதே களமிறங்கி உள்ளது.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இதையடுத்து டெல்லி பேரவை தேர்தலில் போட்டியிடும் 11 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த நவம்பர் 21ம் தேதியும், 20 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை கடந்த 9ம் தேதியும் ஆம் ஆத்மி வௌியிட்டது.
இந்நிலையில் தற்போது 38 பேர் அடங்கிய 3வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி நேற்று வௌியிட்டது. அதன்படி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், தற்போதைய முதல்வர் அடிசி கல்காஜி தொகுதியிலும் களமிறங்குகின்றனர். தற்போதைய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலும், கோபால் ராய் பாபர்பூர் தொகுதியிலும், இம்ரான் உசேன் பல்லிமாறன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2013 முதல் 3 முறை புதுடெல்லி தொகுதி எம்.எல்.ஏவாக பதவிவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீக்‌ஷித் போட்டியிடுகிறார். பாஜ சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஸ் சாகிப் சிங் வர்மா களமிறக்கப்படுகிறார். இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கும், சாதாரண மனிதனாக தனக்கும் இடையே போட்டி என்ற கெஜ்ரிவால் வர்ணித்துள்ளார்.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தல்ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியீடு: புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: