ஐயப்ப பக்தர்கள் பஸ் மீது கார் மோதல்; மலேசியாவில் தேனிலவு கொண்டாடி திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி: கேரளாவில் இன்று காலை சோகம்

திருவனந்தபுரம்: மலேசியாவில் தேனிலவு கொண்டாடிவிட்டு கேரளாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி உள்பட 4 பேர் பத்தனம் திட்டாவில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி மல்லசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஈப்பன் மத்தாயி (63). அவரது மகன் நிகில் (29) கனடாவில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 30ம் தேதி நிகிலுக்கும், மல்லேசேரி பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் (58) என்பவரின் மகள் அனுவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் நிகிலும், அனுவும் தேனிலவு கொண்டாடுவதற்காக மலேசியா சென்றனர். தேனிலவை முடித்துவிட்டு 2 பேரும் இன்று அதிகாலை கேரளாவுக்கு திரும்பினர். அவர்களை அழைத்து வருவதற்காக ஈப்பன் மத்தாயியும், பிஜு ஜார்ஜும் ஒரு காரில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றனர். பின்னர் 4 பேருமாக காரில் ஊருக்கு புறப்பட்டனர்.

காரை பிஜு ஜார்ஜ் ஓட்டினார். அதிகாலை சுமார் 4 மணியளவில் கார் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் பகுதியில் புனலூர்-மூவாற்றுபுழா நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதமாக எதிரே வந்த தெலங்கானா ஐயப்ப பக்தர்களின் பஸ் மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சின்னா பின்னமானது.

இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஈப்பன் மத்தாயி, பிஜு ஜார்ஜ் மற்றும் நிகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அனு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தான் விபத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் புதுமண தம்பதியின் குடும்பத்தினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து குறித்து கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டிய பிஜு ஜார்ஜ் தூங்கியதால் தான் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று போலீசார் கருதுகின்றனர்.

The post ஐயப்ப பக்தர்கள் பஸ் மீது கார் மோதல்; மலேசியாவில் தேனிலவு கொண்டாடி திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி: கேரளாவில் இன்று காலை சோகம் appeared first on Dinakaran.

Related Stories: