மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை வழங்க வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அரசு உடனடியாக மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை, பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர், உடுத்த உடை ஆகியவற்றை வழங்கி உரிய பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும். தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசினுடைய கடமையாகும்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இந்த அரசு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை வழங்க வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: