அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ரூ.14.35 கோடி முறைகேடு பெண் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

மதுரை: அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிப்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்ததில் ரூ.14.35 கோடி முறைகேடு செய்ததாக சிறைத்துறை பெண் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி, இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ல் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் தணிக்கை துறை பதிவேடுகளை கோரியது. ஆனால், இந்த பதிவேடுகளை தணிக்கை துறையிடம் சிறை நிர்வாகம் வழங்கவில்லை. இதன் காரணமாக மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தணிக்கைத்துறை தெரிவித்து விட்டது.

அதே வேளையில் பொருட்களை தயாரிப்பதற்காக ரூ.1.51 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிறுவனங்களின் ஜிஎஸ்டி அறிக்கைகளை ஆய்வு செய்தது. இதில் அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், புள்ளியியல் துறை தரவுகளின்படி அந்த பொருட்களின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.14.35 கோடி என்பதையும் தணிக்கை துறை சுட்டிக்காட்டி உள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தணிக்கை துறை பரிந்துரைத்துள்ளது. இந்தநிலையில் முறைகேடு தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சூரியகலா தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிவில், மதுரை மத்திய சிறை எஸ்பியாக இருந்த ஊர்மிளா(38) (தற்போது கூடலூர்), கூடுதல் எஸ்பியாக இருந்த வசந்தகண்ணன்(36) (தற்போது பாளையங்கோட்டை), நிர்வாக அதிகாரி தியாகராஜன்(52) (தற்போது வேலூர்), தனியார் துறையை சேர்ந்த வி.எம்.ஜாபர்கான்(74), முகம்மதுஅன்சாரி(38), முகம்மதுஅலி(43), சீனிவாசன்(64), சாந்தி, சரவணசுப்பு, தனலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோர் மீது 120(பி) 467, 468, 411, 167, 409 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ரூ.14.35 கோடி முறைகேடு பெண் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: