நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்: ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவது தற்போது டிரெண்டாகி வருகிறது. மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் பொது அமைதியை சீர்குலைக்கும் என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை ஜேஎம் 5வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது பேட்டியில் பேசியது பெரும்பகுதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரானதாகவே உள்ளது. அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் பொருந்தாது. மனுதாரருக்கு எதிராக அவதூறு வழக்கினை அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடரலாம். மதங்களின் சொத்துக்கள் தொடர்பாக மனுதாரர் பேசிய விதம் ஏற்கத்தக்கதல்ல.

சமூக ஊடகத்தை பயன்படுத்தி தாங்கள் பேசுவது என்ன மாதிரியான விளைவுகளை பார்வையாளர்களிடமும், பொது மக்களிடமும், ஒட்டுமொத்த சமுதாயத்திடமும் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்கள் வழியாக பேசுவது தற்போது டிரெண்டாகி வருகிறது. அது மிகவும் துரதிஷ்டவசமானது. மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

மதம், மொழி சார்ந்த நடவடிக்கைகள் என ஏராளமான வேறுபாடுகள் இருந்தாலும் 75 ஆண்டுகளுக்கு மேலாக வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மதம் தொடர்பான பேச்சின் பதிவு சமூக ஊடகங்களில் இலவசமாக பதிவேற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் பொது அமைதியை சீர்குலைக்கும். உடனடியாக நடக்கவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு புள்ளியில் அது நிகழலாம்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை கடமைகளையும் நினைவில் கொள்வது அவசியம். ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பின்பற்ற வேண்டிய கடமை. மதம், மொழி மற்றும் பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்திய மக்களிடையே நல்லிணக்கத்தையும், பொதுவான சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்துவதே அத்தகைய அடிப்படைக் கடமையாகும். மனுதாரர் மீதான இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

The post நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்: ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: