×

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைய உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரிட்டாபட்டி பகுதியில் 5,000 ஏக்கரில் கரும்பு, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்விடத்தில் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளித்திருப்பது மிகவும் தவறான, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக்கட்சிகள் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் ஒன்றிய அரசு அளித்த உரிமையை ரத்து செய்ய வேண்டும் என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு செவி மடுத்து, அதை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசை பொறுத்தவரை வேதாந்தா, அம்பானி, அதானி போன்றவர்கள் வாழ வேண்டும், சாதாரண மக்கள் குறித்து கவலையில்லை என கருதும், மோசமான அரசாக உள்ளது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இப்பிரச்னையில் ஒன்றிய அரசிடம் பேசாமல், இதை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Union Government ,Melur ,Communist Party of India ,State Secretary ,Aritapatti ,Madurai district ,Dinakaran ,
× RELATED பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு...