30 லட்சம் பேர் கலந்து கொண்ட கார்த்திகை மகா தீபத்திருவிழா அசம்பாவிதம் நடைபெறாமல் நடந்து முடிந்த தேரோட்டம்: காவல்துறை தகவல்

சென்னை: கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவின் போது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தேரோட்டம் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடந்து முடிந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் துறை, இந்து அறநிலையத் துறையுடன் இணைந்து வானலை அடையாளம் (RFID) பொருத்தப்பட்ட பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதிச் சீட்டுகளை பக்தர்களுக்கு வழங்கியதால் போலியான அனுமதிச் சீட்டுகள் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

பக்தர்களுக்கு வசதியாக கடந்த தீபத் திருவிழாக்களை காட்டிலும் காவல் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்ட முயற்சியால் கூடுதலாக இரண்டு மடங்கு கார் பார்க்கிங் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு இருசக்கர வாகன ரோந்து நியமித்தும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்தும், அந்த இடங்களில் கூடுதலாக காவலர்களை பணியமர்த்தியதால் 9 சாலைகளிலும் கடந்த வருடங்களை காட்டிலும் அரைமணி நேர போக்குவரத்து நெரிசல் கூட இல்லாமல் வாகனங்கள் எந்த தங்குதடையின்றி திருவண்ணாமலை நகருக்குள் வந்து சென்றன.

கடந்த வருடங்களில் மகா தீபத்தன்று அதிகாலை பரணி தீபம் முடிந்த பின்னர் பொது தரிசனத்திற்கு திருமஞ்சனகோபுரத்தின் அருகில் காத்திருந்த பக்தர்களில் மகா தீபம் ஏற்றுவதற்கு தேவையான ஏற்பாடு செய்வதன் காரணமாக ஒரு பகுதியினர் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த வருடம் காவல் துறை, இந்து அறநிலையத்துறையுடன் இணைந்து விரைவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதால் பொது தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் பரணி தீபம் முடிந்து காலை 5.30 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

காவல் பறக்கும் படைகள் 4-ம், கிரிவலப்பாதையில் காவல் பறக்கும் படைகள் 14-ம் அமைத்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் புதியதாக கடைகள் அமைக்காமல் தடுத்தும், மேலும் கூட்டத்தை சாதமாக்கி போலி சாமியார்கள் பிச்சை எடுப்பதை தடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டதால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் பக்தர்கள் மகா தீப தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். திருக்கோயிலின் 1-ம் பிரகாரத்திலிருந்து கொடிமரம் வழியாக சாமிகளை எடுத்து வந்து காட்சி மண்டபத்தில் வைப்பதற்கும்.

அதே போல் வருடத்திற்கு ஒருமுறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சாமியை எடுத்து வருவதற்கும் வசதியாக கொடிமரத்தின் எதிரே குறிப்பிட்ட அளவு இடத்தை கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள இரும்பு தடுப்பாண்களுக்கு மாறாக 3 அடி உயரமட்டுமுள்ள ஜன்னல் மாதிரி அமைப்பு கொண்ட இரும்பு தடுப்பாண்களை பயன்படுத்தி வெற்றிடமாக வைத்திருந்ததால் பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாகவும் மற்றும் சாமிகளை தூக்குபவர்களுக்கு இடையூறுகள் இல்லாமாலும் சிறப்பான முறையில் மகா தீப நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவின் போது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தேரோட்டம் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடந்து முடிந்தது. தமிழ்நாடு காவல் துறையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து அண்டைமாநில போக்குவரத்து கழகங்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பறிமாறிக்கொண்டதால் பேருந்துகள் உடனுக்குடன் வருவதும், செல்வதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகளின் அசவுகரியம் குறைக்கப்பட்டது. இவ்வாறு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post 30 லட்சம் பேர் கலந்து கொண்ட கார்த்திகை மகா தீபத்திருவிழா அசம்பாவிதம் நடைபெறாமல் நடந்து முடிந்த தேரோட்டம்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: