அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர்: மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி: ‘‘அரசியலமைப்பை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர். எனவே, அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்து பேசுவதன் மூலம் சாவர்க்கரை பாஜ இழிவுபடுத்துகிறது’’ என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, மக்களவையில் அரசியலமைப்பு குறித்து 2 நாள் விவாதம் நடந்தது. 2வது மற்றும் இறுதி நாளான நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு குறித்தும், இந்தியா எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்தும் பாஜவின் சித்தாந்தவாதி சாவர்க்கரின் எண்ணங்களை மேற்கோள்காட்டி எனது உரையை தொடங்க விரும்புகிறேன். ‘‘இந்திய அரசியலமைப்பில் மோசமான விஷயம் என்னவென்றால், அதில் இந்தியர்களுக்கு எதுவும் இல்லை. மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்குவதற்குரியது. பண்டைய காலத்திலிருந்து நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் அடித்தளமாக இருந்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக இந்த புத்தகம் நமது தேசத்தின் ஆன்மீகம் மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருந்து வருகிறது’’ என சாவர்க்கர் கூறியிருக்கிறார். இதன் மூலம் அரசியலமைப்பில் எதுவுமில்லை, மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்டுதான் இந்தியா இயங்க வேண்டுமென சாவர்க்கர் தனது எழுத்துக்கள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். இப்போது இதற்கு எதிராகத்தான் போராட்டம் நடந்து வருகிறது. அரசிலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாக நீங்கள் (பாஜ) கூறுவதன் மூலம் உங்கள் உயர்ந்த தலைவர் சாவர்க்கரை இழிவுபடுத்துகிறீர்கள். அவரை கேலி செய்கிறீர்கள். அவரை அவமதிக்கிறீர்கள்.

ஏற்கனவே நான் கூறியதைப் போல, மகாபாரதத்தில் நடந்தது போல, இந்தியாவில் இன்று ஓர் போர் நடக்கிறது. அதில் ஒருபக்கம் அரசிலமைப்பை காக்கக் கூடிய சிந்தனையுடன் நாங்கள் இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலமைப்பை காக்கக் கூடியவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், பெரியார் இருக்கிறார். கர்நாடகாவில் பசவண்ணா இருக்கிறார். மகாராஷ்டிராவில் பூலே இருக்கிறார். குஜராத்தில் மகாத்மா காந்தி இருக்கிறார். இந்த தலைவர்களை எல்லாம் பாராட்ட நீங்கள் தயக்கம் கொள்கிறீர்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அடைபட்டிருக்க வேண்டுமென அரசியலமைப்பில் எந்த இடத்தில் கூறியிருக்கிறது? உங்கள் (பாஜ) புத்தகத்தில் தான் அப்படி எழுதப்பட்டிருக்கிறது, அரசிலமைப்பு புத்தகத்தில் அல்ல. துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது போல், அக்னி வீரர்கள் திட்டம் மூலம் நீங்கள் இந்த நாட்டின் இளைஞர்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள். மும்பையின் தாராவியை அதானிக்கு கொடுப்பதன் மூலம், சிறு வணிகர்களின் கைவிரலை நீங்கள் வெட்டுகிறீர்கள். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால் நீங்கள் அதானிக்கு பலன் தருகிறீர்கள். சமூக, பொருளாதார சமத்துவம் இல்லாவிட்டால் அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்து விடும் என அம்பேத்கர் கூறியது நடந்து கொண்டிருக்கிறது. இங்கு சமூக சமத்துவமும் இல்லை, பொருளாதார சமத்துவமும் இல்லை. எனவேதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறுகிறோம். இதன் மூலம் யாருடைய கட்டை விரல் வெட்டப்படுகிறது என்பதை நாட்டிற்கு காட்ட விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் கூறினார். தனது பேச்சின் போது ராகுல் காந்தி ஒருகையில் மனுஸ்மிருதியையும், மறுகையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர்: மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: