மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்து ஏரிகள், பாலாற்றில் ரசாயன கழிவு திறந்துவிடுவதை தடுக்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை : மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்து ஏரிகள், பாலாற்றில் ரசாயன கழிவுகள் திறந்துவிடுவதை தடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆர்டிஓ ராஜராஜன் தலைமையில் நேற்று நடந்தது. ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் விவசாயிகள் பேசியதாவது:

வடகால் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். லாடவரம் பகுதியில் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டு வேலை நடைபெறவில்லை.

லாலாபேட்டை மருத்துவமனையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி உள்ளது. ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் சரிவர விவசாயிகள் கூட்டம் நடைபெறவில்லை. சிப்காட் பேஸ்-3 பகுதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் பொன்னை ஆற்றில் கலக்கிறது. நவ்லாக் பண்ணையில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும்.

மழைக்காலம் என்பதால் பலருக்கு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பாகவெளி கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும் குடிதண்ணீருக்கு ஆழ்துளை கிணறு போடாமல் கிணறு வெட்ட அறிவுறுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் கோமாரி தடுப்பூசி போடுவதற்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பாகவெளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கூடுதலாக கழிப்பறைகளை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரி: விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கழிப்பறை கட்டுவதற்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற 16ம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், ‘பொன்னையாற்றில் இருந்து லாலாபேட்டை ஏரி, வாணாபாடி ஏரி, செட்டித்தாங்கல் ஏரி, அம்மூர் ஏரி போன்ற ஏரிகளுக்கு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. அம்மூர் பகுதியில் தனியார் கம்பெனி இரண்டு இயங்குகிறது. மழைக்காலங்களில் தொழிற்சாலை கழிவுநீரை திறந்து விடுவதால் அம்மூர் ஏரியில் ரசாயன கழிவுநீர் கலந்துள்ளது.

இந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பார்வையிட்டு தண்ணீரை ஆய்வு செய்வதற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் தண்டலம் ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது அந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அந்த ஏரியிலும் தொழிற்சாலைகள் கழிவு நீர் கலந்து நிறம் மாறிய தற்போது உள்ளது. அந்த தண்ணீர் பாலாற்றில் சென்று கலக்கிறது. தொழிற்சாலைகளின் கழிவுநீரை ஏரிகளிலும் பாலாற்றிலும் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ஏரிகளில் தொழிற்சாலை கழிவுகள் திறந்துவிடப்படுவது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.மேலும் நிலகண்டராயன்பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். ஐம்புகுளம் கிராமத்திற்கு தடம் எண்:4 அரசு பேருந்து 35 வருடமாக இயங்கி வந்தது. தற்போது அந்த பேருந்து வருவதில்லை. பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கூட்டத்திற்கு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் வர வேண்டும்.

மாவட்டத்தில் ஏரி கால்வாய்களை தூர் வார வேண்டும். கால்நடைகள் முகாம் அமைத்து மருந்துகள் வழங்க வேண்டும். அம்மூரில் மின்சார வாரியம் சப்-ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈச்சந்தாங்கல் வள்ளுவம்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் முன்வைத்தனர். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்து ஏரிகள், பாலாற்றில் ரசாயன கழிவு திறந்துவிடுவதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: