விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம்

*ஆபத்தான மண்சாலையில் அபாய பயணம் செய்யும் பச்சமலை மக்கள்

*4 கிலோ மீட்டர் வனப்பகுதி சாலைக்கு எதிர்பார்ப்பு

கெங்கவல்லி : சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலை ஊராட்சியில் ஓடைக்காட்டுப்புதூர், வெங்கமூடி, நெய்வாசல், மாயம்பாடி, நல்லமாத்தி, பெரியமங்கலம், சின்னமங்கலம், நாகூர், சின்னநாகூர், வாஞ்சாரை என்று 28குக்கிராமங்கள் உள்ளது.

தரை மட்டத்திலிருந்து 2ஆயிரம் அடி உயரத்திலுள்ள இந்த கிராமங்களில், சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், 4ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மரவள்ளிக்கிழங்கு, முந்திரி, நெல், மிளகு, மஞ்சள், காய்கறிகளை மக்கள் சாகுபடி செய்கின்றனர்.

இப்பகுதியில் விளையும் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக, ஆத்தூருக்கு செல்லவேண்டும். மினி ஆட்டோ, லாரி மூலமாக 130கிலோ மீட்டர் தூரம் கடந்தால் தான், ஆத்தூருக்கு செல்லமுடியும் என்ற நிலை உள்ளது.

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்கிறோம். இதில் பெரும்பகுதி வருமானத்தை வாகனங்களுக்கே வாடகையாக கொடுக்கிறோம் என்பது மலைவாழ் மக்களிடம் தொடரும் குமுறலாக உள்ளது. வனப்பகுதியில் 4கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்தால், இதற்கு தீர்வு காணலாம் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து பச்சமலை மக்கள் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: திருச்சி-சேலம் மாவட்ட மலைகிராமங்களை இணைக்கும் எல்லையாக பச்சமலை உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட உப்பிலியாபுரம் வழியாக, பச்சமலை கிராமத்துக்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கெங்கவல்லி தாலுகாவில் இருந்து கூடமலை, தம்மம்பட்டி, உப்பிலியாபுரம் வழியாக பச்சமலையில் உள்ள குக்கிராமங்களுக்கு செல்லமுடியும்.

போதிய சாலை வசதி இல்லாததால் 130 கிலோ மீட்டர் சுற்றி பயணம் செய்தால் மட்டுமே ஆத்தூருக்கு வரமுடியும். இதனால் பச்சமலை கிராமங்களில் விளையும் விளைபொருட்களை ஆத்தூருக்கு கொண்டு செல்வதற்கான வாகனச்செலவு பல மடங்கு அதிகமாகிறது.

அதேநேரத்தில், நல்லமாத்தி மலைகிராமத்தில் இருந்து வேப்படிப்பாலக்காடு சென்று வீரகனூர், தெடாவூர், கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கு செல்ல, 60 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. ஆனால், நல்லமாத்தி மலை கிராமத்தில் இருந்து வேப்படிப்பாலக்காடு வரை, நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு வனப்பகுதியில் தார் சாலை இல்லை. கரடு முரடான, கற்கள் சூழ்ந்துள்ள சாலையில் வாகனங்கள் செல்லமுடியாது. தற்போது மக்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த பாதை வழியாக நடந்து செல்கின்றனர்.

நல்லமாத்தி முதல் வேப்படிப்பாலக்காடு வரையுள்ள வனப்பகுதியில், மண் சாலையானது செங்குத்தாகவும், கீழ்மட்டமாகவும், மேடு பள்ளமாகவும் உள்ளது. கற்பாறைகளும் அதிகமாக உள்ளது. இதனை பொருட்படுத்தாமல் பலர், இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் வனப்பகுதியில் 4கிலோ மீட்டர் தூரத்துக்கு, தார் சாலை அமைத்தால் மக்களின் சிரமம் வெகுவாக குறையும். விளைபொருட்களை எடுத்துச்செல்வதற்கான தூரமும் குறையும். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்

பச்சமலை ஊராட்சி மன்ற தலைவர் சின்னமணி பிரேம்குமார் கூறுகையில், ‘நல்லமாத்தி முதல் வேப்படிப்பாலக்காடு வரை உள்ள 4கிலோ மீட்டர் தூரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தில் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும், ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளோம். அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்,’ என்றார்.

40 ஆண்டு கால கோரிக்கை

விவசாயிகள் பாலகிருஷ்ணன் மற்றும் இளையராஜா கூறுகையில், ‘கடந்த 40ஆண்டுகளாக வனப்பகுதியில் 4கிலோமீட்டர் தார்சாலை என்பது தொடரும் கோரிக்கையாக உள்ளது. விளை பொருட்களை 130கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆத்தூருக்கு எடுத்துச் செல்வதால், லாபம் எல்லாம் வாகன வாடகைக்கே சென்று விடுகிறது.

மேப்படி முதல் நல்லமாத்தி வரை தார்சாலை அமைக்கப்பட்டால், ஆத்தூர் மட்டுமன்றி பெரம்பலூருக்கும் குறைந்த வாகன செலவில் கொண்டு செல்வதற்கு வழி கிடைக்கும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: