வடக்கு நோக்கி மதுரை வீரன் சந்நதி உள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் வாகன மண்டபத்தினை காணலாம். இங்கே யானை மற்றும் பலிபீடம் உள்ளது. அடுத்துள்ளது ஸ்தபன மண்டபம். இங்கு இடதுபுறம் ஆலயத்தின் மூல முதல்வரான விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில் தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தர்ம சாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தர்ம சாஸ்தாவின் வலதுகால் பூமியை நோக்கிய நிலையிலும் இடது கால் மடிந்து குறுக்காகவும், இடது முழங்கால் மேல் இடது கை நீட்டி அருள்பாலிக்கிறார். இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்திலும், இடதுபுறம் புஷ்கலாம்பிகை அமர்ந்துள்ளார்.
கேரள வணிகர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு அப்போதைய சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை வந்த கேரள வணிகர்கள் வியாபாரம் செய்ய தங்களுடன் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகளில் வந்தனர். அவர்கள் தங்களுடன் தாங்கள் வழிபாட்டு தெய்வமான தர்ம சாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் உடன் கொண்டு வந்தனர். நடனபுரிக்கு அந்த வணிகர்கள் வந்தபோது வானம் கருத்து மழை வரும் போல் இருந்தது. உடனே வணிகர்கள் தங்கள் பொருட்களுடனும் தர்ம சாஸ்தாவுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் அன்று தங்கினர்.
இரவு வந்தது. தர்ம சாஸ்தா தனது சகோதரரான விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகர் ஆதி சித்தி விநாயகர் என்று இன்றும் இந்த ஆலயத்தில் போற்றப்படுகிறார்.
மழைவிட்டதும் வணிகர்கள் புறப்பட ஆயுத்தமானார்கள். அப்போது அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை உடன் எடுத்து சென்றனர். ஆனால் விநாயகருடன் அங்கு வீற்றிருந்த தர்மசாஸ்தாவின் சிலையை மறந்துவிட்டு சென்று விட்டனர். வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருளுடன் தர்ம சாஸ்தா சிலையும் இருப்பதாக நினைத்துள்ளனர். தஞ்சை வந்த வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த மிளகு, ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரித்த போது அவர்கள் அதிர்ந்து நின்றனர்.
காரணம், அந்த மூட்டைகள் யாவும் உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. தர்ம சாஸ்தாவின் சிலை இல்லை என்றும் தெரிந்து கொண்டனர். மின்வெட்டாய் அவர்கள் மனதில் அதன் காரணம் புரியத் தொடங்கியது. தாங்கள் கொண்டு வந்த தர்மசாஸ்தாவின் சிலையை தவறுதலாக நடனபுரியில் விட்டுவிட்டு வந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள் உடனே புறப்பட்டு நடனபுரி வந்தனர்.
அங்கு வீற்றிருந்த தர்ம சாஸ்தாவின் சிலையை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தர்ம சாஸ்தா அசரீரியாக அவர்கள் முன் தோன்றி ‘‘இது என்னுடைய திருவிளையாடல், அஞ்ச வேண்டாம். உங்க பொருட்கள் மறுபடியும் அதே நிலையை அடைந்திருக்கும். நான் இங்கே இருக்க விரும்புகிறேன். இனி, வணிகம் செய்யும் பொருட்டு நீங்கள் இவ்விடம் வரும் போது என்னை தரிசித்து செல்லலாம். நான் இவ்விடம் நிலையம் கொண்டதை உங்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே நான் இந்த திருவிளையாடல் நடத்தினேன்’’ என்று அந்த அசரீரி ஒளித்தது. அன்று முதல் தர்ம சாஸ்தா நடனபுரியில் அருள்பாலித்து வருகிறார்.
இத்தலத்தில் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அந்தப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவர்கள் தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்தியும் குழந்தை பிறந்தவுடன் ஆலயமணியை வாங்கி கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி மகிழ்கின்றனர்.
தர்ம சாஸ்தா பூர்ணாம்பிகை, புஷ்கலாம்பிகையுடன் அருள்பாலிக்கும் இத்தலம், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கி.மீ .தொலைவில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது. கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
மகி
The post குழந்தை வரம் அளிக்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா! appeared first on Dinakaran.