கலப்பட தேயிலை தூள் தயாரிக்க மேற்குவங்கத்தில் இருந்து லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் தேயிலை கழிவுகள் பறிமுதல்

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேயிலை வாரிய குன்னூர் மண்டல அலுவலக அதிகாரிகள் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கலப்பட தேயிலை தூள் தயாரிக்க லாரியில் தேயிலை கழிவுகள் ஏற்றி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை துடியலூர் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13,600 கிலோ தேயிலை கழிவுகள் இருந்ததை கண்டுபிடித்து லாரியை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, லாரியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அந்த தேயிலை கழிவுகள் சென்று சேர வேண்டிய தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் வளாகத்திற்கு, லாரியுடன் எடுத்துச் செல்லப்பட்டு, மொத்த தேயிலை கழிவுகளையும் உரிமையாளரின் இடத்தில் இறக்கி முற்றிலும் அழித்தனர்.

தேயிலைக் கழிவுகளை வாங்கியவர், அதனைப் பற்றிய முழு விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை முறையான விளக்கத்துடன், தேயிலை வாரியத்திடம் சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த காலங்களில் அவர் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்த அனைத்து தேயிலை மற்றும் தேயிலை கழிவுகள் சம்மந்தமான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோரப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பின், உரிய முறையில் அதனை ஆய்வு செய்து அதன் நம்பக தன்மையைப் பொறுத்து தேயிலை வாரியத்தின் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு இணங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் காலங்களில், இது போன்ற தேயிலை கழிவுகளை முறையற்ற படி எடுத்துச்செல்ல வேண்டாம் என்று அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை ஆய்வுக் குழுவினர் எச்சரித்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் தேயிலை வாரிய அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து தொடர்ந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இயற்கை உரம் தயாரிப்பதாக கூறி வெளி மாநிலத்தில் இருந்து ஆர்சி எனப்படும் தரமற்ற தேயிலை கழிவுகளை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளில் கலப்பட தேயிலை தூள் தயாரிப்பதாக புகார்கள் வௌியாகி வரும் நிலையில் தற்போது தேயிலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியால் மாவட்டத்தில் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
எனவே, இது போன்று முறையற்ற முறையில் தேயிலை கழிவுகளை வட மாநிலங்களிலிருந்து வாங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கலப்பட தேயிலை தூள் தயாரிக்க மேற்குவங்கத்தில் இருந்து லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் தேயிலை கழிவுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: