பகவதி அம்மன் கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

*ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடும்பு திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கொடும்பு சோகநாஷினி நதிக்கரையோரம் மகிஷாசுரமர்தணி மற்றும் அன்னபூர்ணேஸ்வரி ஆகிய இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் பண்டைக்காலத்தில் பூதகணங்களால் வடிவமைக்கப்பட்டது என்ற ஐதீகம் உள்ளது.

இக்கோயில்களில் கடந்த டிச.7ம் தேதி கோயில் தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு நாட்களிலும் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழா துவங்கிய நாள் முதல் சாக்கியார்கூத்து, பாடகம், கதகளி, ஓட்டன்துள்ளல், நாதஸ்வர கச்சேரி, தாயம்பகா, பஞ்சவாத்யம், கேளி, பற்று, மேளம், திருவாதிரரை நாட்டிய நிகழ்ச்சிகள், சோபான சங்கீதம், பக்தி இசைக்கச்சேரி, பக்தி பிரபாசணம், ராமாயண பாராயணம், நாராயணீய பாராயணம் நடைபெற்றன.

இக்கோயிலில் கடந்த டிச.7ம் தேதி முதல் பாலக்காடு மாவட்டத்தின் சுற்று பிரகாரத்திலுள்ள தத்தமங்கலம், சித்தூர், பாலக்காடு, கஞ்சிக்கோடு, வாளையார், கொழிஞ்சாம்பாறை, வண்டித்தாவளம் ஆகிய இடங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபட்டனர்.

கோயிலின் சுற்று பிரகாரத்திலுள்ள அகல் விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம், நேற்று மற்றும் நாளை கோயிலின் சுற்று பிரகாரத்திலுள்ள அகல் விளக்குகளை பக்தர்கள் நெய்யால் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும், தொழில் அபிவிருத்தி, கல்வி தடைகள், திருமண தடைகள் நீங்கும், செல்வம் செழிப்பு விருத்தியடையும் என பக்தர்கள் நம்பி கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை மலபார் தேவஸ்தான டிரஸ்ட்டியும், கோயில் நிர்வாகக்குழு தலைவருமான தம்பான், செயலாளர் நாராயணன்குட்டி ஆகியோர் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். திருவிழா துவங்கிய நாள்முதல் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கியவாறு உள்ளனர்.

இன்று ஆறாட்டு உற்சவம் நடைபெறுகிறது. இரண்டு யானைகள் மீது அம்மன் செண்டை வாத்யத்துடன் சோகநாஷினி ஆற்றில் ஆறாட்டு படித்துரையில் நீராடி வீதியுலா வந்து உச்சிக்கால விஷேச பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து ஆறாட்டுசத்யா (அன்னதானம்) பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விழா கொடியிறக்கம் நடைபெறுகிறது.

The post பகவதி அம்மன் கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: