×

கோட்டக்குப்பம் அருகே சோகம் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று தொழிலாளி தற்கொலை

காலாப்பட்டு : கோட்டக்குப்பம் அருகே காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடி கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (49). இவரது மனைவி அபி (54). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. தன்னை விட வயது அதிகம் இருந்தாலும், அபியை மணிகண்டன் காதலித்து திருமணம் செய்தவர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சென்னையில் வசித்து வந்த இவர்கள், மணிகண்டனின் அண்ணன் கோபாலுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிள்ளைச்சாவடி பகுதியில் குடியேறியுள்ளனர். இதற்கிடையே, தனது அண்ணனிடம் இருந்து பிரிந்து, அதே பகுதியில் மணிகண்டன்-அபி தம்பதியர் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வந்தனர்.

மணிகண்டன், கட்டிட வேலை உள்ளிட்ட எந்த வேலை கிடைத்தாலும் செய்து வந்தார். மனைவி அபிக்கு குழந்தை பேறுக்கான சிகிச்சை, சர்க்கரை வியாதி இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனால் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.

மேலும், சமீப காலமாக மனைவி அபி, மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து மன குழப்பத்தில் இருந்த மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த தேங்காய் நார் கயிற்றால் மனைவி அபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், சிமெண்ட் ஷீட் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பைப்பில் அதே கயிற்றால் அவரும் தற்கொலை செய்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அவரது அண்ணன் கோபால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் தூக்கில் பிணமாகவும், கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயத்துடன் அபியும் சடலமாகவும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கோட்டக்குப்பம் அருகே சோகம் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kottakupam ,Manikandan ,Pillaichawadi Kengayamman Temple Street ,Viluppuram District Kottakupam ,
× RELATED பீட்சா கடை ஊழியர் கொலையில் சிறுவன்...