பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீட்டர் மழை கொட்டியது. இதனால், நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட்டு நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கன மழை காரணமாக கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்லம்பாக்கம், கொடிவலசா, வெங்கடாபுரம், வடக்குப்பம், பெருமாநல்லூர், நொச்செலி, புண்ணியம், அத்திமாஞ்சேரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் மழை நீரில் முழுமையாக நாசம் அடைந்துள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர் மற்றும் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை, மிளகாய், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நாசம் அடைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழைக்கு விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கர்லம்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் 10 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் முற்றிலும் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார். தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கீடு மேற்கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பள்ளிப்பட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.