திருத்தணி முருகன் கோயிலில் மகா தீப தரிசனம்: பக்தர்கள் பரவசம்


திருத்தணி: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்து பரவசமடைந்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் கார்த்திகை திபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபாரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு காவடி மண்டபத்தில் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மாலை 6 மணி அளவில் மலைக்கோயில் மாடவீதியில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டம் மத்தியில் சொக்கைப்பனையில் கோயில் அர்ச்சகர் மகா நெய் தீபம் ஏற்றினார். அதே நேரத்தில் மலைக் கோயிலுக்கு எதிரில் உள்ள பச்சரிசி மலையில் தயார் நிலையில் வைக்கப்பட்ட 250 கிலோ நெய் தீபம் வாண வேடிக்கையுடன் ஏற்றப்பட்டது.

பக்தர்கள் பரவசத்துடன் தீப தரிசனம் செய்து அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மலையில் தீபம் ஏற்றப்பட்டதும், திருத்தணி நகரம் முழுவதும் வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றினர். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் மகா தீப தரிசனம்: பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.

Related Stories: