சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் இன்று (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேனி, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தக் கூடாது என ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
The post கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.