திண்டுக்கல்: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட 6 பேர் பலியான நிலையில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தினர். திண்டுக்கல்லில், திருச்சி ரோட்டில் காந்திஜி நகரில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்திலேயே மளமளவென தரைத்தளம் முழுவதும் தீ பரவியது.
தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் நான்கு தளங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் புகை மூட்டம் காரணமாக உள் மற்றும் புற நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் என அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துவிட்டு, நோயாளிகள், உறவினர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் லிப்டில் சிக்கிய சிறுமி உள்பட 6 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 31 பேர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த மருத்துவமனையில் நேற்று காலை மதுரை தடவியல் துறை துணை இயக்குனர் காஜா மைதீன் தலைமையில் உதவி இயக்குனர்கள் வேலுச்சாமி, ராஜேஷ், பிரகாஷ், சங்கர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தீ விபத்துக்கு மின் வயர்களில் ஏற்பட்ட உராய்வு காரணமா அல்லது யுபிஎஸ் வெடித்ததா என்ற கோணத்தில் விசாரணையை துவக்கி உள்ளனர். எஸ்பி பிரதீப் நேற்று காலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே இறந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களது உடலுக்கு ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். இறந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருப்பதாகவும், நிவாரண உதவி அளித்திருப்பதாகவும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்வையொட்டி கூடுதல் எஸ்.பி. தெய்வம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போடப்பட்டிருந்தது.
The post தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு திண்டுக்கல் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு appeared first on Dinakaran.