* விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் உள்பட 3 பேர் கைது, கடத்தல் கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் தப்பி ஓட்டம்
சென்னை: விதுபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, தனிப்படையினர் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். சாதாரண உடைகளில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை போல் நடித்துக்கொண்டு, விமானம் புறப்பாடு பகுதி மற்றும் வருகை பகுதி ஆகிய இடங்களில் கண்காணித்தனர்.
இந்நிலையில் துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறையினர் ரகசியமாக கண்காணித்த போது, அதில் சுமார் 28 வயதுடைய ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை தீவிரமாக கண்காணித்தனர்.
அந்த பயணி விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு இடையே, சுமார் 12 அடி உயரம் கண்ணாடி தடுப்பு உள்ளது. அதன் அருகில் நீண்ட நேரமாக இருந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் புறப்பாடு பகுதியில், இலங்கைக்கு செல்வதற்காக மற்றொரு ஆண் பயணி வந்து நின்றதும், வருகைப் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த 28 வயது ஆண் பயணி, தான் வைத்திருந்த கைப்பையில் இருந்து பந்து போன்ற உருண்டைகளை, 12 அடி கண்ணாடி தடுப்பை தாண்டி புறப்பாடு பகுதிக்குள் வீசினார். அங்கு நின்ற மற்றொரு இலங்கை ஆண் பயணி, அதை கேட்ச் பிடித்து, அவசர அவசரமாக சிறிது தூரத்தில் நின்ற விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்தார்.
இந்த காட்சிகளை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 3 பேரையும் மடக்கிப்பிடித்து, தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதோடு அந்த பந்துகளையும் உடைத்து பார்த்தபோது, அதனுள் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 2.2 கிலோ தங்க பசை இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.75 கோடி. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 3 பேரையும் கைது செய்து, தங்கப் பசையையும் பறிமுதல் செய்தனர்.
அதோடு அவர்களிடம் விசாரித்தனர். அப்போது விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப், இந்த தங்கப் பசை பந்துகளை தனது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியே எடுத்துச் சென்று, விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில், தயாராக நிற்கும் மற்றொரு நபரிடம் கொடுப்பார். அந்த நபர் அந்த தங்கப்பசை பந்துகளை, சென்னை நகருக்குள் கொண்டு செல்வார். அவர்தான் இந்த கும்பலுக்கு தலைவன் என்றும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் இவர்கள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர் என்ற தகவல் தெரிந்ததும் இந்த கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
எனவே மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், தப்பி ஓடிய கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கிரவுண்ட் ஸ்டாப் உள்பட கடத்தல் குருவிகளான 2 பயணிகள் ஆகிய 3 பேரையும் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள கிரவுண்ட் ஸ்டாப் மற்றும் கடத்தல் குருவி ஒருவர் இருவரும் தாங்கள் புதுமாப்பிள்ளைகள் என்றும், அவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணங்கள் நடக்க இருப்பதாகவும், திருமண விழா செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் இதுபோல் கடத்தல் வேலையில் ஈடுபட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு கதறினர்.
The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: சினிமா பாணியில் ரூ.1.75 கோடி மதிப்பு 2.2 கிலோ தங்கப்பசை கடத்த முயற்சி appeared first on Dinakaran.