“அண்ணாமலையாருக்கு அரோகரா”…விண்ணதிர எழுந்த கோஷத்துடன் 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணமாலை: திருவண்ணமாலையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோத, அரோகரா கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் ஒலிக்க, அண்ணாமலை மீது திட்டமிட்டபடி, உரிய பாதுகாப்புகளுடன் மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும், புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, “அண்ணாமலையாருக்கு அரோகரா”… “தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா” என விண்ணதிர கோஷம் எழுப்ப, 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது இந்த ஆண்டிற்கான கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியிலும், கிரிவல பாதையிலும் கூடி இருந்த பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசித்தனர். திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு டிசம்பர் 04 ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.

தினமும் மாலையில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் தேரோட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெற்றது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொண்டு, மகாதீபத்தை தரிசிப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய துவங்கி விட்டனர். ஏராளமானோர் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது முதலே தினசரி கிரிவலம் செல்ல துவங்கினர். திருக்கார்த்திகை திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நடைதிறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து 4 மணியளவில் மூலவர் அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. சமீபத்தில் திருவண்ணாமலையில் பெய்த கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பரணி தீபத்தை காண 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை அன்று பெளர்ணமி இல்லா விட்டாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை துவங்கி கிரிவலம் செய்து வருகின்றனர். மாலை 5 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் அர்த்த மண்டபத்தில் எழுந்தருள, மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் உரிமை கொண்ட பர்வதராஜ குல வம்சத்தினருக்கு அண்ணாமலையார் சன்னதியில் வைத்து பரிவட்டம் கட்டப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள், மகாதீபம் ஏற்றுவதற்கான ஜோதியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சரியாக மாலை 05.58 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்து காட்சி கொடுத்ததும், கொடி மரத்திற்கு அருகில் உள்ள அகண்ட கொப்பரையில், பர்வதராஜ குலத் வம்சத்தை சேர்ந்தவர்கள் அகண்ட தீபத்தை ஏற்றினார்கள். இந்த தீபம் ஏற்றிய அடுத்த நொடி அண்ணாமலையார் மலை மீது மகாதீபமும் ஏற்றப்பட்டது. மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டதை கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என முழக்கமிட்டனர். எங்கும் சிவ முழக்கங்கள் முழங்க திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி தரும் மகாதீபம் ஏற்றப்பட்டது. சங்கநாதம், கைலாய வாத்தியங்கள் இசைக்க மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களிடம் பக்தி பெருக்கு ஏற்றப்பட்டதை காண முடிந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மிக குறைந்த அளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

The post “அண்ணாமலையாருக்கு அரோகரா”…விண்ணதிர எழுந்த கோஷத்துடன் 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: