×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதில் இரு தரப்பினரும் மாறிமாறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெரம்பூர் திருநாவுக்கரசர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா (52). இவரது கணவர் திருநாவுக்கரசு, காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை, அதே பகுதியில் வசிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ள திரு (எ) தியாகராஜன், மல்லிகா வீட்டிற்கு சென்று, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மல்லிகா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் 16வது குற்றவாளியான பிரதீப் (28). இவர் தற்போது புகார் அளித்துள்ள மல்லிகாவின் மகன் ஆவார். பிரதீப் தற்போது பூந்தமல்லி சிறையில் உள்ளார். இவரை கைது செய்த பிறகு மல்லிகா மற்றும் அவரது கணவர் மேற்கண்ட விலாசத்தில் உள்ள வீட்டிற்கு வருவதில்லை. கடந்த 5 மாதங்களுக்கு பின்பு வீட்டிற்கு வந்த நிலையில் தன்னை பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல், தியாகராஜனும் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் என்பவரின் தந்தை திருநாவுக்கரசு காவல்துறையில் உள்ளதால் அதிகாரத்தை பயன்படுத்தி தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், அவரது 2வது மகன் தனுஷ் என்பவரை வைத்து என் கதையை முடித்து விடுவேன் என மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். 2 புகார்கள் மீதும் திருவிக நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Perambur ,Mallika ,Thirunavukkarasar Street, Perambur ,Thirunavukarasu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு...