×

புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு 2 விமானங்கள் சென்னை திரும்பியதால் பரபரப்பு

சென்னை: சென்னை- மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை- கொச்சி தனியார் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு, நடுவானில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, சென்னைக்கே திரும்பி வந்தன. மும்பை விமானத்தில் 160 பயணிகள் உள்பட 168 பேரும், கொச்சி விமானத்தில் 84 பயணிகள் உள்பட 90 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மும்பைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 160 பயணிகள், 8 ஊழியர்கள் என 168 பேருடன் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். தொடர்ந்து, விமானம் வானில் பறக்கத் தொடங்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர்.  அதன் பின்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 8 விமான ஊழியர்கள் உபட 168 பேர் நல்வாழ்வாக உயிர் தப்பினர். இதையடுத்து, நேற்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சி செல்லும் தனியார் பயணிகள் விமானம் ஒன்று 84 பயணிகள் 6 விமான ஊழியர்கள், 90 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

தொடர்ந்து, விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்பு அந்த விமானம் காலை 7.15 மணி அளவில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே பயணிகளை மாற்று விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைப்பதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு விமானி கண்டுபிடித்து, சென்னை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரை இறக்கப்பட்டதால், விமானத்திலிருந்த 84 பயணிகள் உள்பட 90 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சென்னையில் தரையிறங்காமல் ஐதராபாத் திரும்பிய விமானம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் 72 பயணிகளுடன் நேற்று பகல் 12 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது. அந்த நேரத்தில் சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த மழை கொட்டியபடி, மோசமான வானிலை நிலவியது.

இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. ஆனாலும் வானிலை சீரடையாத காரணத்தால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானத்தை மீண்டும் ஐதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர். இதையடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் ஐதராபாத்துக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.

The post புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு 2 விமானங்கள் சென்னை திரும்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Indigo Airlines ,Kochi ,
× RELATED நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு: ‘ஓ மை காட்’ நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்