அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் பணம் கையாடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் அதிரடி கைது

சென்னை: அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்த, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரெக்கார்ட் கிளர்க்காக பெருங்களத்தூரை சேர்ந்த குபேரன் (50) மற்றும் ஆவடியை சேர்ந்த கலைமகள் (44) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இருவரும் கடந்த மே மாதம் அட்மிஷன் கவுன்டரில் பணியாற்றினர்.

அப்போது, வடமாநில நோயாளிகள் சிலர் சிகிச்சை முடிந்து செல்லும் போது, அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான கட்டணம் ரூ.20 ஆயிரம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், குபேரன் மற்றும் கலைமகள் ஆகிய இருவரும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு போலியான ரசீது ெகாடுத்து அனுப்பி உள்ளனர். மேலும், மருத்துவமனை ரெக்கார்டில் பணத்திற்கான போலி கணக்கு எழுதியுள்ளனர். பிறகு வடமாநிலத்தவர்கள் கொடுத்த ரூ.20 ஆயிரத்தை இருவரும் சமமாக பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம் ஆண்டு வருவாய் கணக்கு விவரங்களை ஆய்வு செய்த போது, அதில் மே மாதம் இருவரும் பணியில் இருந்த நாளில் முன்னுக்கு முரணாக கணக்குகள் எழுதி இருந்தது தெரியவந்தது. உடனே மருத்துவனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதில் வடமாநில நபர்கள் கொடுத்த பணத்தை வாங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த பணத்தை மருத்துவமனை ரெக்கார்ட் நோட்டில் குறிப்பிடவில்லை என தெரியவந்தது.

உடனே மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து குபேரன் மற்றும் கலைமகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, பல ஆண்டுகளாக மருத்துவமனை ரெக்கார்ட் கிளர்க்காக பணியாற்றி வரும் குபேரன் மற்றும் பெண் ஊழியர் கலைமகள் ஆகியோரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பணி காலத்தில் இதுபோல் பல மோசடிகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் அட்மிஷன் கவுன்டரில் உள்ள ரெக்கார்டு நோட்டுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் பணம் கையாடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: