ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்ததாக உள்ளது : திமுக எம்பி கனிமொழி தாக்கு

டெல்லி : பேரிடர் அறிவிப்புகளை வெளியிடுவதற்காக தனியாக ஒரு அறையை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று மக்களவையில் கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மக்களவையில் இன்று தேசிய பேரிடர் திருத்தச்சட்டம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி, ” வானிலை மாற்றங்கள் சரியாக கணிக்கப்படாத காரணங்களால் இயற்கைச் சீற்றங்களின்போது மக்களை பாதுகாப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் சரியானதா என்று கூட அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியது.ஆனால் ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. நிவாரண நிதியை கோர ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தை மாநிலங்கள் நாட வேண்டியுள்ளது. பேரிடர் அறிவிப்புகளை வெளியிடுவதற்காக தனியாக ஒரு அறையை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் தகவல்களை முறையாக கூறாததால், மே.வங்கத்தில் பேரழிவு ஏற்பட்டதாக மம்தா குற்றம்சாட்டியிருந்தார். வெப்பஅலை பாதிப்பை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.

முன்னேறிய மாநிலமாக இருப்பதாலேயே, மிகப்பெரிய பாதிப்புகளை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. வர்தா, கஜா புயல் பாதிப்புக்கு, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.மிக்ஜாம் புயலால் எனது தூத்துக்குடி தொகுதி மிகபெரிய பாதிப்பை சந்தித்தது. ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்ததாக உள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்ததாக உள்ளது : திமுக எம்பி கனிமொழி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: