நாம் எல்லா சிவாலயங்களிலும் சிவலிங்கத்தை காண்கிறோம். வணங்குகிறோம். எப்படி இந்த சிவலிங்கம் உருவானது? எப்படி லிங்கம் என்று நாம் அழைக்கும் இந்த உருவம் உருவானது? இந்த விஷயத்தை ஆராய்ந்தால் உலகில் முதன் முதலாக லிங்கம் உருவானது என்பது திருவண்ணாமலைதான். மகா சிவராத்திரி அன்றுதான் லிங்கம் உருவானது. ஈசன் அக்னி ஸ்தம்பமாக வானுக்கும், அதைத் தாண்டியும், பூமிக்கும் கீழ் பாதாளத்தைத் தாண்டியும் நெடுநெடுவென உயர்ந்து விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சி தந்தார் என்று புராணங்கள் கூறுவதை கேள்வியுற்றிருப்போம். அப்படி அக்னி ஸ்தம்பமாக நின்ற ஈசனே நம் பொருட்டு மலை வடிவாக குளிர்ந்து இன்று மலையாக, அதாவது அண்ணாமலையாக காட்சியளிக்கிறார்.
எனவே, இந்த அண்ணாமலைதான் உலகின் முதல் லிங்கம். அதனால்தான் எல்லா கோயில்களின் கருவறையின் பின் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் என்கிற மூர்த்தி இருக்கும். இந்த லிங்கோத்பவ மூர்த்தியே அண்ணாமலை ஆகும். ஒருமுறை ரமண மகரிஷியிடம் சென்று ஒரு பக்தர், ‘‘பகவானே… நீங்கள் இந்த மலையையே ஈசன் என்று சொல்கிறீர்களே. அது எப்படி?’’ என்று கேட்டார். பகவான் அவரைப் பார்த்து, ‘‘ஏனப்பா… நீ உன்னை இந்த சரீரமாக நினைக்கின்றாயே அதுபோல ஈஸ்வரன் இந்த மலையை, தான் என்று நினைக்கின்றார். கயிலாயம் என்பது சிவனுடைய வீடு. ஆனால், இந்த அருணாசல மலை சுயம் சிவமேயாகும்’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னபோது பக்தர் மெய்சிலிர்த்துப் போனார்.
லிங்கோத்பவ மூர்த்தி என்பது ஈசனின் அறுபத்து நான்கு மூர்த்திகளில் ஒன்று. இதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தி இருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ (அன்னம்) பறவை உருவத்தில் பிரம்மா பறந்தபடி இருப்பார். இந்த சிலைக்குள்தான் மகாசிவராத்திரி உற்பத்தியான புராணமும், உலகில் லிங்கம் என்பது எப்படி தோன்றியது என்கிற கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.
ஆக்கல் எனும் தொழிலைச் செய்யும் பிரம்மாவுக்கு தான்தான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறோம் எனும் அகங்காரம் கிளைவிட்டது. அருகேயிருந்த விஷ்ணுவிடமும் தம் அகங்காரக் கிளையைப் படரவிட்டது. ‘‘உமக்கொன்று தெரியுமா! நீர் என்னதான் உயிர்களைக் காத்தாலும், நான் சிருஷ்டிக்கவில்லையெனில் உமக்கே வேலையில்லை’’ என கேலி பேசியது. ‘‘பிரம்மனே! நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனைக் காக்க வேண்டாமா. அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா. உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு, உமக்கென்ன வேலை இருக்கிறது? உன்னைப் படைத்ததே நான்தான். என்னைவிட நீ உயர்ந்தவனா? நானே உன் குரு. இப்போது நீ இப்படிப் பேசுவதே நான் கொடுக்கும் சக்தியால்தான். என்னிலிருந்து வரும் என் தொழில்தான் உயர்ந்தது. இதிலிருந்தே நான் உயர்ந்தவன் என்பது வெளிப் படை’’ என்று சிறுவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள். சொற்போராக இருந்தது.
பிறகு, கோபக் கனல் பொங்க ஒருவரை ஒருவர் கடுஞ்சொற்களால் பேசிக் கொள்ளத் தொடங்கினர். அப்போது சட்டென்று, அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. சட்டென்று நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் கக்கும் தூணாக ஈசன் அக்னி உருவில் வானையும், பூமியையும் ஊருடுவிச் சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெந்த வஸ்துவும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞானமயமாக இருக்கவேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தன்னால்தானே என அஞ்ஞான மயமாக மயங்கியிருப்பது பார்த்துதான் இப்படி அக்னி வடிவாகத் தோன்றினார்.
உலகில் வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவே இல்லை. அருணாசலம் எனும் இத்தலத்தில் ஜோதி வடிவில் அக்னி ஸ்தம்பமான ஈசன் வெளிப்பட்டார். பிரமாண்டத்தைப் பிளந்து வெளிப்பட்டதால் அதி நீலமான ஆகாயம் மேலே கண்ணுக்குக் காணாமல் போனது. எல்லா திசைகளும் திடீரென ஜொலித்தன. சிவந்த ஒளியால் பூசப்பட்ட அவை பூலோக சூரியனைப் போலாயிற்று. ஜோதியின் சிவப்பால் உலகங்களின் தாவர ஜங்கமங்கள் யாவும் சிவந்த ஒளி வீசின. அங்கு பெருஞ் சக்தியொன்று வானுக்கும் பூமிக்குமாக அக்னி ஸ்தம்பமாக நின்றது. பிரம்மாவும் விஷ்ணுவும் இதென்ன என்று சற்றே மிரண்டனர். ஆதி சிவன்… ஆதி சிவன்… என்று கைகூப்பினர்.
ஞானாக்னியான ஈசன் அவர்களை நோக்கி பேசத் தொடங்கினார். மாபெரும் நிகழ்வொன்று யுகந்தோறும் நிலைத்து நிற்கப் போகிறது என்பது, அப்போது யாருக்கும் அங்கு தெரியவில்லை. பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களையும் விட மாபெரும் சக்தியொன்று பேசத் தொடங்குவதை உணர்ந்து பேச்சொடுங்கி நின்றனர். அவர்களுக்குள் விளங்கும் பரமாத்ம வஸ்துவான ஈசன், தானே அருணாசலமாக வெளியே லிங்க வடிவமாக, லிங்கோத்பவராக விண்ணுலகைத் தாண்டியும் மண்ணுலகை அகழ்ந்தும் பிரமாண்டமாக தகதகத்து ஜொலித்தது.
பாதாள உலகத்தின் பாம்புகளெல்லாம் அந்த மலையின் சல்லி வேராக விரிந்திருந்தது. விண்ணைத் தாண்டி வானுலகை ஊடுருவிச் சென்று மறைந்திருந்தது. வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் அருணையின் செந்நிறச் சாயலை உற்றது. அக்னியின் செங் கதிர்கள் சமுத்திரங்களில் பரவி பொன்னை உருக்கிக் காய்ச்சியதுபோல ஒளிர்ந்தன. ஞானத் திரளாய் ஈசன் பிரமாண்டமாய் நின்றார். இப்பேர்ப்பட்ட பிரமாண்டத்தைக் கண்ட பிரம்மாவும் விஷ்ணுவும் தனித்தனியே சிந்தித்தார்கள்.
இதென்ன ஆச்சரியம்! நாகலோக மணிகளின் ஒளித்திரளின் வெளிப்பாடா இது. பன்னிரண்டு ஆதித்யர்களும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கின்ற னரா? என்ன விசித்திரமான சக்தி இது. வேறு எதையுமே அறிய முடியாத அளவுக்கு சகலத்தையும் மறைத்துத் தானே விழுங்கி இன்னதென்று அறியாதபடிக்கு இப்படி விருத்தியடைந்திருக்கிறதே! இது அக்னியே! ஆனாலும், தகிக்கவில்லை. இதன் மூலம் எது? எதிலிருந்து இப்படி விருத்தியடைந்துள்ளது? எந்த சக்தியால் இப்படி விளங்குகின்றது? இதன் எல்லைகள் எதுவரை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன? அதல, விதல, சுதல, பாதாளம் நோக்கி என்னைப் போகத் தூண்டுகிறதே இது! ஆகாயம் தாண்டி முடிவுறாத வானத்தின் எல்லைக்கு பறக்கச் சொல்கிறதே என்று பிரம்மாவும், விஷ்ணுவும் தேடிக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று பெரும் ஆவலுற்றனர்.
இரு பெரும் அகந்தை எழுச்சிகளின் வடிவாகவே இங்கு பிரம்மாவும், விஷ்ணுவும் விளங்குகின்றனர். படைத்தல் எனும் செயலுக்கு கருவியே பிரம்மா. காத்தல் எனும் செயலுக்கு விஷ்ணுவே கருவியாகிறார். இவர்களைக் கொண்டு சர்வேஸ்வரனே அனைத்தையும் செய்கிறான். ஆனால், நான்தான் செய்கிறேன் எனும் அகந்தை உணர்ச்சி தோன்றும்போது ஈசனின் அளவிலா கருணை அருளாக கூடவே வருகிறது. அகந்தையை அறுக்க அதைவிட தன்னை வலிமை மிக்கதாகக் காட்டுகிறது. என்னைத் தெரிந்து கொண்டு விடுவாயா என்று சவால் விடுகிறது.
‘‘உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம். அதை நான் சொல்லலாமா’’ என்று அக்னி ஸ்தம்பத்திலிருந்து அசரீரியான ஈசன் கேட்டார். ‘‘ஆஹா… சிவனாரின் தீர்ப்புக்கு ஞாலமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்க மாட்டோமா என்ன?’’ என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர். ‘‘என் இந்த அக்னி வடிவமான ஜோதியின் உருவின் அடியையும், முடியையும் முதலில் யார் கண்டறிகிறார்களோ அவரே உயர்ந்தவர்’’ என்றார். ஒரு கணம் கூட யோசிக்காமல் இருவரும் சேர்ந்து, ‘‘ஆஹா… தாராளமாக. இன்னொரு விஷயம். இதை முதலில் காண்பவரே தலைவனாவார். இரண்டாமவர் அவருக்கு அடிமையாவார்” என்று அவர்களுக்குள்ளேயே முடிவெடுத்தனர்.
இறை, ஆத்மா, சச்சிதானந்தம், பிரம்மம் என்றெல்லாம் மிகுந்த உயர்வான எல்லாவற்றிற்கும் ஆதார வஸ்துவை சாதாரணமாகப் பார்த்துவிடல் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். அதிலும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டுவிட்டு மீண்டும் திரும்புதல் என்பதே அறிவீனத்தின் உச்சம். எங்கிருந்து சகல படைப்புகளும் தொடங்குகிறதோ, படைப்புகள் அழிந்து மீண்டும் வெறும் வெளியாக பிரம்மம் மிச்சப்படும்போது இருக்கும் அந்த சக்தியை விளக்குவதற்கு யார் அங்கு இருப்பார்கள்? அதிலிருந்து அதற்கு அன்னியமாக வேறொரு வஸ்து எது இருக்கப் போகிறது? இதை அறிவிக்கவே அவர்கள் இருவரும் தயாரானார்கள். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான அருணாசலம் எனும் பரமாத்மாவின் வடிவை எவராலும் அளக்க முடியாது. அருணாசலத்தின் மகிமை இவ்வளவுதான் என்று எவராலும் முழுவதும் உரைக்க முடியாது. அதன் வடிவம் இன்னது தான், இப்படிப்பட்டதுதான் என்று அறிய முடியாது.
பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தம்பமாக அருணாசலம் எனும் தலத்தில் பெருமானின் அடிமுடியைத் தேடியவண்ணம் இருந்தனர். பிரம்மா ஹம்ஸ (அன்னம்) பறவையாக ஆகாயம் நோக்கி அக்னி ஸ்தம்பத்தின் மேலாகவும், திருமால் வராஹ (பன்றி) ரூபத்தோடு பூமியை அகழ்ந்துகொண்டும் சென்று இருவருமே முடிவில்லாத ஈசனின் வடிவத்தை நோக்கி நகர்ந்தனர். இங்கு பிரம்மாவிற்குள் பிரம்மமாய் நின்ற ஈசன் புரிய வைத்தார். வராகத்திற்குள் சத்திய வஸ்துவான சிவத்தை சீர்தூக்கிப் பார்க்க வைத்தார். அகங்காரம் தேடித் தேடி ஓயட்டும் என்று காத்திருந்தார். மகாவிஷ்ணு கீழே போகப் பன்னெடுங்காலம் கழிந்தது. அவரால் அடியை மட்டுமல்ல, அடியின் எந்தப் பாகத்தையும் காண முடியவில்லை. அவரின் வலிமை குன்றியது. அப்போதுதான் மெல்லியதாய் அகங்காரத்தினால் இது முடியாது என்கிற சத்வ குணம் மேலோங்கியது.
அகங்காரம் தேயத் தொடங்கியது. தான் செய்த சபதத்தையே மறந்தார். தான் எங்கு தேடத் தொடங்கினோம் என்று திரும்பச் செல்லவும் வலிவற்று சிவனடியை நினைத்தபடி கிடந்தார். முயற்சி, முயற்சியற்ற நிலை என்கிற இரண்டையும் விட்டு தன்னையே நிவேதனமாக, தன்னையே ஈசனுக்காக அர்ப்பணித்தார். எதிர்பார்ப்பற்ற, இலக்கற்ற பக்தி அவருள்ளத்தில் உதித்தது. ஹரி பூமிக்கருகே வந்தார். பிரம்மாவின் சிறகுகள் சோர்ந்து போயின. கொஞ்ச நேரம் அகங்காரம் உயர்ந்தெழுந்துவிட்டு மீண்டும் அடங்கியது. தன்னால் இனி எதுவும் செய்ய இயலாது என்று பிரம்மாவும் ஓய்ந்தார். இந்த ஓய்தல் உடம்போ, மனதோ அல்ல; நான் என்கிற அகங்காரம். இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்கிற ஓய்ச்சலேயாகும்.
பிரம்மா ஆரம்பத்தில் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தாலும், இறுதியில் சரணாகதி அடைந்தார். எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் எழுச்சியுறுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஏனெனில், ஒரு ஜீவன் தன்னுடைய இயல்பான ஆத்ம வடிவமான நிலையிலிருந்து எழுந்து, நான் இந்த உடம்பு என்று நினைக்கும்போதே ஆச்சரியமாக நீ எப்போதும் நான்தான். அதனால் மயங்காதே. நாம் இருவரும் வெவ்வேறு வஸ்துவல்ல. இந்த தோற்ற மயக்கம் கண்டு ஏமாந்து விடாதே என்று அகங்கார எழுச்சிக்கு இணையாக ஆத்மாவின் அருளும் உதவிக்கு வந்து விடுகிறது. அப்படி அருள் வடிவில் நம்மைப்போல் ஒரு உருவமாக எழுந்ததே அருணாசல மலையாகும்.
ஞானம் எனும் சிவத்திற்கு வேறாக, வேறெந்த வஸ்துவும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞான மயமாக இருக்க வேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தம்மால்தானே இந்த உலக வியாபாரம் நடைபெறுகிறது என்று அஞ்ஞான மயமாக மயங்கியிருப்பதைப் பார்த்துதான் இப்படி அக்னி வடிவாகத் தோன்றினார். உலகில் வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவே இல்லை. அருணாசலம் எனும் இத்தலத்தில் ஜோதி வடிவில் அக்னி ஸ்தம்பமாக ஈசன் வெளிப்பட்டார். எனவே, ஆதியில் ஈசன் அருணாசலம் எனும் லிங்க வடிவில் நின்றார். உலகின் முதல் லிங்க மூர்த்தியே அருணாசலம். இந்த மலையே லிங்கோத்பவ மூர்த்தி. இது நிகழ்ந்த திருநாளே மகாசிவராத்திரி எனில் அருணாசலமெனும் மலையின் பெருமையை என்னவென்று உரைப்பது!
The post பிரபஞ்சத்தின் முதல் லிங்கமே அண்ணாமலைதான்! appeared first on Dinakaran.