சாலை அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

 

ராஜபாளையம், டிச.12: சாலை பணிகள் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி அங்கீகரிக்கப்பட்ட புதுப்பாளையம் விரிவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 60 அடி அகல புறவழி திட்டச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களின் வீடுகளை இடிப்பதாக கூறி பணிகளை நிறுத்தினர். இதுகுறித்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுமக்கள் ஆலோசகர் வள்ளிநாயகம் தலைமையில் சென்றனர். வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் கருத்துக்களை கேட்டனர். அப்போது பொதுமக்கள் தங்களின் வீடுகளை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்து சேதப்படுத்தியது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஏன் இந்த கூட்டம். எங்களுக்கு சாலை அமைப்பதில் எந்த உடன்பாடும் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், இந்த தகவலை மேலிடத்திற்கு பரிசீலனைக்கு அனுப்புகிறோம் என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சாலை அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: