சாலை ஆய்வாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், டிச.12: விதிமுறைப்படி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கோட்டத்தில் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர்கள்(சாலை ஆய்வாளர்கள்) நிலை -2 காலிப்பணியிடங்களை நெடுஞ்சாலைத்துறை அரசாணை எண் 34ன் படி நிரப்ப வேண்டும், இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வூதிய குறைப்பு நடவடிக்கைகளை களைந்து விதிமுறைப்படி ஓய்வூதியம் வழங்கிட மாநில கணக்காயருக்கு உரிய விபரங்கள் அனுப்ப வேண்டும், திறன்மிகு உதவியாளர்களின் தனி நபர் விண்ணப்பங்கள் மீது கோட்ட அலுவலகத்தில் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாநில தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தவசிலிங்கம், மாநில மகளிர் குழு உறுப்பினர் சுந்தரவள்ளி முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மண்டல செயலாளர் பேச்சிநாதன் வரவேற்றார். பொதுச் செயலாளர் குருசாமி விளக்கி பேசினார். கவுரவ பொதுச் செயலாளர் மாரிமுத்து சிறப்புரை வழங்கினார். விருதுநகர் கோட்ட செயலாளர் வனராஜா நன்றி கூறினார்.

The post சாலை ஆய்வாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: