குளச்சல் அருகே நடுக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கியது 9 மீனவர்கள் உயிர் தப்பினர்: தணுஷ்கோடி, புதுவையில் தத்தளித்த 7 பேர் மீட்பு

குளச்சல்: குளச்சல் அருகே நடுக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கியது. இதில் 9 மீனவர்கள் உயிர் தப்பினர். இதேபோல் தணுஷ்கோடி, புதுவையில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் செல்வம் (45). சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது படகில் பள்ளம் சகாய பனிதாஸ் (40) உட்பட 9 பேர் கடந்த 4ம் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இவர்கள் குளச்சலில் இருந்து 25 கடல் மைல் தூரத்தில் படகை நங்கூரமிட்டு நிறுத்தி, மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கொமொரோஸ் தீவை சேர்ந்த சரக்கு கப்பல் மோதியதில் விசைப்படகின் பின் பகுதி உடைந்து, மூழ்கத் தொடங்கியது. தகவலறிந்து சக மீனவர்கள் படகுகளில் வந்து அவர்களை மீட்டு குளச்சல் மின்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். ராமேஸ்வரம் தீவில் நேற்று தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சூறைக்காற்று வீசியது. இந்நிலையில் அரிச்சல்முனை அருகே தென்கடல் பகுதியில் நேற்று மதியம் ஒரு நாட்டுப்படகில் 3 மீனவர்கள் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கரையை நோக்கி வந்தபோது திடீரென நாட்டுப்படகு தலைகீழாக கடலில் கவிழ்ந்தது.

சக மீனவர்கள் படகையும் மீனவர்களையும் மீட்டு பத்திரமாக கரைக்கு சேர்த்தனர். இதேபோல புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது படகின் இன்ஜின் பழுதடைந்தால் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.கடலோர காவல் படையினரிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லாததால், மற்றொரு படகில் கடலுக்குள் சென்று அந்த 3 மீனவர்களையும் படகையும் மீட்டு வந்தனர்.

The post குளச்சல் அருகே நடுக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கியது 9 மீனவர்கள் உயிர் தப்பினர்: தணுஷ்கோடி, புதுவையில் தத்தளித்த 7 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: