புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைக்கும் ₹5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் 48.4 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும், தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றிலும், வீடூர் அணையிலும் உபரி நீர் திறக்கப்பட்டு சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் புதுவைக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. புயலால் புதுச்சேரிக்கு ₹614 கோடியே 88 லட்சத்துக்கு பல்வேறு துறைகளில் சேதம் மதிப்பிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக ₹600 கோடியை விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாமை சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அரசு சார்பில் கோப்பு தயார் செய்து நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் உதவித்தொகையை எதிர்ப்பார்க்காமல் மாநில அரசின் நிதி மூலமாகவே ₹5 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 3,54,726 குடும்ப அட்டைகளுக்கு தலா ₹5 ஆயிரம் என்ற அடிப்படையில் ₹177 ேகாடியே 36 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்து கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 422, காரைக்காலில் 33 ஆயிரத்து 897, ஏனாமில் 10 ஆயிரத்து 895 என மொத்தமாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 214 மஞ்சள் அட்டைகளுக்கு ₹102 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரியில் 1,15,894, காரைக்காலில் 28 ஆயிரத்து 653, ஏனாமில் 4 ஆயிரத்து 965 சிவப்பு அட்டைகளுக்கு என மொத்தமாக ₹74 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. இந்த ெமாத்த நிதியும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி புதுச்சேரியில் அனைத்து துறைகளில் உள்ள வருவாயில் இருந்து ₹170.48 கோடி பயன்படுத்தி கொள்ளப்படும். மேலும் சிறப்பு கூறு நிதியில் இருந்த ₹6 கோடியே 88 லட்சத்து 30 ஆயிரத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் விரைவில் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
The post அரசு ஊழியர் உட்பட அனைவருக்கும் ₹5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க கவர்னர் ஒப்புதல் appeared first on Dinakaran.