பாரதியார் பல்கலை பதிவாளர் மீது முறைகேடு புகாரை விசாரணை நடத்த அதிகாரி நியமனம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், துணைவேந்தர் பணிகளை பொறுப்பு குழு கவனித்து வருகிறது. தவிர பதிவாளர் பணியிடம் கடந்த 8 வருடங்களாக நிரப்பப்படவில்லை. தற்போது, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக ரூபா குணசீலன் பொறுப்பு பணியில் இருந்து வருகிறார்.

இவர், பதிவாளர் பணி மட்டுமின்றி நிதி அதிகாரி, ரூசா நிதிகளின் இயக்குநராகவும் பொறுப்பில் இருக்கிறார். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பிறகும் தேவையின்றி அவசர கோப்புகளை பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சில உதவி பெறும் கல்லூரிகளில் முதல்வர் பதவிக்கான நேர்காணல் நடத்த முடியாத நிலை இருக்கிறது.

பதிவாளரின் நடவடிக்கையால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் சுமூகமான செயல்பாடுகள் சீர்குலைந்து இருப்பதாக சிண்டிகேட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பதிவாளர் ரூபா குணசீலன் தொடர்பான புகார்களை விசாரிக்க பாரதியார் பல்கலையின் வேந்தர் மற்றும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார்.

இவர், பதிவாளர் மீதான புகார்களை விசாரித்து தனது விரிவான அறிக்கையை வரும் ஜனவரி 10க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார். மேலும், விசாரணை அதிகாரிக்கு தேவையான உதவிகளை துணை வேந்தர் பொறுப்பு குழுவினர் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாரதியார் பல்கலை பதிவாளர் மீது முறைகேடு புகாரை விசாரணை நடத்த அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: