இதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் நெருக்கடி நிலையில் இருந்தபோது கடந்த 1924 ஆண்டு ஏப்.13ம் தேதி பெரியாரின் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிக்கு வழிநடத்தி சென்றார். இறுதியாக திருவாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய இச்சாலையில் அனைவரும் செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துள்ளது. பெரியார் சமூகநீதி காக்க போராடி பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த 1994ம் ஆண்டு நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அண்ணா, கலைஞர் வழியில் பெரியாரை போற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து அறிவிப்பை விதி 110இன்கீழ் வெளியிட்டார். அதன்படி, நூற்றாண்டு விழாவின் போது, “கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் சென்று பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அங்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சி கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பெரியாரின் நினைவகம் மற்றும் நூலகம் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டும் மறுசீரமைக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். திராவிட கழக தலைவர் வீரமணி முன்னிலை வகிக்க உள்ளார். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வாசவன், சஜி செரியன், தமிழக தலைமைச்செயலர் முருகானந்தம், கேரள அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக வைக்கம் நுற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கேரளாவிற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
* அண்ணா, கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 1967ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது “இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை” என்றார் அண்ணா. பெரியார் மறைந்தபோது, பெரியார் இறுதி மரியாதை செலுத்துவதற்காகத்தான் இந்த ஆட்சியே என்று கூறியவர் கலைஞர். அண்ணா வழியிலும் கலைஞர் வழியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியாரையும் அவரது வழியையும் எண்ணங்களையும் போற்றுவதையே முதன்மை கடமையாக கருதி வருகிறார். அதனால்தான், 100 ஆண்டுகளுக்கு முன்பு போராட்ட வெற்றி விழாவில் பெரியாரை மறக்காமல் அழைத்தது போல, இன்றும் கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வரை அழைத்துள்ளார். பெரியாரை போற்றுவதையே முதன்மை கடமையாகக் கருதும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொள்கிறார்.
* முற்போக்குணர்வு கொண்ட கேரளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
கேரள மாநிலம் சென்றது குறித்து முதல்வர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
‘வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக வளமான பண்பாடும், அமைதி தவழும் இயற்கை அழகும், முற்போக்குணர்வும் கொண்ட கேரளம் வந்துள்ளேன். ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும் நம் திராவிட உடன்பிறப்புகள் நல்கும் வரவேற்பும் கனிவுமிகு விருந்தோம்பலும் நெஞ்சைத் தொடுகிறது, சொந்த மண்ணில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
* மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம்: காணொலி வெளியீடு
பெரியாரின் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவியையொட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நூற்றாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நான் நேரில் கலந்துகொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; கேரள முதல்வர் பினராயி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.