இந்த மையம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு இடர்பாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு அளிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. எம்ஐடி வளாகத்தில் இயங்கிவரும் இந்த மையம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கிறது. தொழில்துறைக்கும், அரசு துறைகளுக்கும் தொழில்நுட்பம் ரீதியான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. தற்போது இந்த இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆராய்ச்சி மையம் தனது செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்த இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமாக திகழ்ந்து வரும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் பெங்களூரு கிளையுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் பெங்களூரு கிளை நிர்வாக இயக்குநர் சுதர்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, கூட்டு ஆராய்ச்சி முன்மொழிவுகள், ஆராய்ச்சி வெளியீடுகள், ஆலோசனைகள் மற்றும் ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்டங்களை இரு நிறுவனங்களும் கூட்டாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய இயக்குநர் ஜெனரல் மகேஷ் எத்திராஜன் கூறியதாவது: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப திறன் அமையப்பெற்ற மாணவர்களை அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றில் முதுநிலை தொழில்நுட்ப பாட திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பாட திட்டங்களுக்கு தேவையான நிதியை இரு நிறுவனங்களும் இணைந்து பெற்று தருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். 2030ம் ஆண்டிற்குள் சென்சார் டெவலப்மெண்ட் டெக்னாலஜிஸ் மற்றும் உள்நாட்டு சிப் டெவலப்மெண்ட் டெக்னாலஜி ஆகியவை இந்தியாவில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுக்கு ஏதுவாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எம்ஐடி பேராசிரியர் ரவிச்சந்திரன், அண்ணா பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் குணசேகரன், இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆராய்ச்சி மையம் இயக்குநர் புவனேஸ்வரி, துணை இயக்குநர் மெய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பெங்களூரு மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் அண்ணா பல்கலைக்கழக ஐஓடி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதுநிலை தொழில்நுட்ப பாட திட்டங்களை வழங்க முடிவு appeared first on Dinakaran.