பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பத்தையும் ஏன் அகற்ற உத்தரவிடக் கூடாது? உயர் நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி நாகஜோதி. மதுரை மாநகராட்சி 20வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். அதிமுகவின் 53ம் ஆண்டு விழாவை முன்னிட்டு எங்கள் பகுதியில், பழைய கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். அந்த இடத்திற்கு அருகில் பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ள போதிலும், இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவிடக் கூடாது. தமிழ்நாட்டில் கொடி கம்பங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன? இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை டிஜிபி சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறி, இந்த வழக்கில் தமிழ்நாடு டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 3க்கு தள்ளி வைத்தார்.

The post பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பத்தையும் ஏன் அகற்ற உத்தரவிடக் கூடாது? உயர் நீதிமன்ற கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: