சென்னை: சென்னை, மதுரை, கோவைக்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டீசல் பஸ்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் குறைவான செலவில் அதிக தூரம் பயணிக்க கூடியது அதே நேரம் இது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது மாசை ஏற்படுத்தாது.
இதனால் டீசல் பஸ்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகப்படுத்த பல்வேறு தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த ஆண்டு 500 மின்சார பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் மேலும் 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என இந்தாண்டு போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.இதையடுத்து சாலை போக்குவரத்து நிறுவனம் 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
இதில் விருப்பமுள்ள நிறுவனங்கள், இணையவழியில் பிப்.5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, பிப்.7-ம் தேதிக்குள் காகித வடிவிலான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை காணலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகளில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 320 குளிர்சாதன பேருந்துகளும், கோவைக்கு 20 குளிர்சாதனம், 60 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும், மதுரைக்கு 100 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை, மதுரை, கோவைக்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.