இந்நிலையில், ரயிலில் பக்தர்கள் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓடும் ரயிலில் கற்பூரத்தை ஏற்றி வழிபட கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் சேலம் வழியாக சபரிமலை சென்ற ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர், ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையம் ஒன்றில் பெட்டிகளை சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பைப்லைனில், ஐயப்ப பக்தர்கள் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெட்டியிலிருந்து இறங்கும் ஐயப்ப பக்தர் ஒருவர், அந்த பைப்லைனில் குளித்துவிட்டு மீண்டும் ரயிலில் ஏறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த சமயத்தில் இரு பிளாட்பார்மிலும் உள்ள ரயில்களில், ஏதேனும் ஒன்று புறப்பட்டால் கூட பெரும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில் பயணத்தில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பக்தர் ஒருவர் குளிப்பது போன்று வந்துள்ள வீடியோ, கேரளாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில் நிலையம் என தவறாக பரப்பப்பட்டு வருகிறது. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்று ஆபத்தை உணராமல் ஒருசில பக்தர்கள் ஈடுபடும் செயலால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.
The post ஆபத்தை உணராமல் ரயில் நிலையத்தில் இறங்கி குளிக்கும் ஐயப்ப பக்தர்கள்: நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.