காங்கிரசுடன் கூட்டணி கிடையாது.! டெல்லி தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். டெல்லி சட்டப் பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணிகள் குறித்த விவாதங்களை தொடங்கியுள்ளன. ஆம்ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை படிப்படியாக அறிவித்து வருகிறது. மக்களவைத் தேர்தலை போன்று, காங்கிரஸுடன் இணைந்து ஆளும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதில் சாத்தியக்கூறு இல்லை என்று ஏற்கெனவே டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியாகின. இந்த செய்தியை தனது சமூக வலை தளத்தில் பகிர்ந்த கெஜ்ரிவால், ‘டெல்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ளும். காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை’ எனத் தெரிவித்துள்ளார். டெல்லி தேர்தல் கூட்டணி குறித்து கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், இந்த முறை டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி – பாஜக – காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

The post காங்கிரசுடன் கூட்டணி கிடையாது.! டெல்லி தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: