×

ராமன் எத்தனை ராமனடி

ராம நாமாவை மூன்று முறை சொன்னால் அது நாராயணனின் ஆயிர நாமத்திற்கு சமானம் என்று சிவபெருமான் திருவாய் மொழிந்தருளினார். இந்த சம்பவம் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்திலேயே
குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

“கேன உபாயேன லகுனா விஷ்ணோ: நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதை: நித்யம் ஸ்ரோதிம் இச்சாமி அஹம்பிரபோ’’
– என்ற பார்வதியின் கேள்விக்கு ஈஸ்வரன் இவ்வாறு விளக்குவதாக சஹஸ்ரநாமத்தின் மூலம் அறியலாம்.

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’’

இங்கு மூன்று எனும் எண் ஆயிரம் ஆவதில் ஒரு கணித விஞ்ஞானம் உண்டு. ஜோதிடத்தைச் சேர்ந்த லீலாவதி கணிதத்தில் எழுத்துக்களைக் கொண்டே கணக்கிடும் முறை ஒன்று உண்டு. ‘`காதி நவ, பாதி பஞ்ச, யாத்பஷ்டௌ’’ சம்ஸ்கிருதத்தில் ‘க’ விலிருந்து 9 எழுத்துக்களையும் ‘ப’விலிருந்து 5 எழுத்துக்களையும் ‘யா’விலிருந்து 8 எழுத்துக்களையும் கொண்டு எண்களைக் கூறுவது வழக்கம். அதன்படி ‘ரா’ எனும் எழுத்து ய, ர, ல, வ என்ற வரிசையில் இரண்டாவதாக அமைந்துள்ளது. அது 2 எண்ணைக் குறிக்கும். ‘ம’ என்பது ‘ப’ வரிசையில் ஐந்தாவது எழுத்தாகும். இது 5 எண்ணைக் குறிக்கும். இரண்டையும் பெருக்கினால் 2×5 = 10 (பத்தாகும்). மூன்று ‘ராம’ சப்தத்தைப் பெருக்கினால் 10×10×10 = 1000 (ஆயிரம்) ஆகும் என்பர். எனவே, மூன்று ராமநாம ஜபம் திருமாலின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிய பலனைத் தருகிறது.ராமநாமம் நமக்கு ராமபக்தியைத் தூண்டி நன்மையை விளைவிக்கும். ஒரு மனிதன் எந்நிலையிலும் ராம பக்தியைக் கைவிடலாகாது. அவனிடத்தில் திட பக்தி இருந்தாலே போதும். மற்றைய முயற்சிகள் அனாவசியம். நம்மிடம் ராமபக்தி ஒன்பதாம் வாய்ப்பாட்டைப் போல இருக்க வேண்டும். அந்த வாய்ப்பாட்டில் முக்கியமான எண் ஒன்பது. அதைக்கொண்டு எப்படியெல்லாம் பெருக்கினாலும் மூல எண் 9 தன் நிலையை மாற்றிக் கொள்வதில்லை. அதுபோன்று நாமும் நம்மிடையே ராமபக்தியை நிலை குலையாது பாதுகாப்போமாகில் நன்மைகட்குக் குறைவேது! 9×2=18; 1+8=9.

அதேபோல் மற்றைய எண்களுடனான உறவும் 9லே கொண்டுவிடும். (9×13 =117 & 1+1+7=9) ராம நாமத்தைப் பற்றிய துளசிதாஸரின் கருத்து இது. ராம நாமத்தை மட்டுமே கூறினாலும் போதும், உலகினர் அனைவரும் மங்களத்தைப் பெறுவர் என்கிறார் வால்மீகி. ராமதாபனீயம் எனும் உபநிஷத் ராம எனும் சொல் ப்ரணவத்திற்குச் சமம் என்று ஓதுகிறது.ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு, ராமபக்தியின் சிறப்பை விளக்குகிறது. ராம நாமத்தின் பெருமையை அறிந்துகொண்ட நாம் ஸ்ரீராமனுக்கென்று அமைந்துள்ள சில திருக்கோயில் களைப் பற்றி அறியலாம்.

மதுராந்தகம்

சென்னை – திண்டிவனம் மார்க்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீஏரிகாத்த ராமனின் திருக்கோயில் மதுராந்தகத்தில் அமைந்துள்ளது. வெள்ள அபாயத்திலிருந்து ஜனங்களை காப்பதற்காக இராம&இலக்குமணர் கையில் வில்லேந்தி, உடையும் நிலையிலிருந்த மதுராந்தகம் ஏரிக்கரையின்மேல் நின்று ஏரி உடைந்து வெள்ள அபாயம் ஏற்படாமல் காத்ததுமின்றி அக்காலத்தில் கலெக்டராக இருந்த வெள்ளைக்காரனின் மனதிலும் இடம்பெற்றுத் தன் பக்தனாக ஆக்கிக்கொண்டார்கள். இச்செய்கையினாலேயே ஏரிகாத்த ராமர் என்று அழைக்கப்படும் மதுராந்தகம் ராமனின் உயர்ந்த மிடுக்கான தோற்றம் பக்தர்களின் கண்களுக்கும் மனதுக்கும் ஒரு பெரிய விருந்து.

வடுவூர்

தஞ்சையிலிருந்து சுமார் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள வடுவூர் ராமர் திருக்கோயில் ராமர் கோயில்களின் சிகரம் என்றால் மிகையாகாது. இங்குக் காட்சி தரும் திவ்யமங்கள விக்ரஹங்களைத் தரிசித்த கண்களுக்கு வேறு எந்தக் காட்சியும் மனதில் நிற்குமோ?

திருவல்லிக்கேணி

சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தஸாரதி ஸ்வாமி திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீராமர் ‘’சிற்றவை பணியால் முடிதுறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே’’ என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றவர் என்ற பெருமை வாய்ந்தவர். 108 திவ்ய தேசங்களுள் இராமனாகவே காட்சி தந்து ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமை இவருக்கும் அயோத்தியில் அமைந்துள்ள இராமனுக்கும் மட்டுமே உள்ள தனிப்பெருமையாகும்.

திருவஹிந்திபுரம்

தென்னாற்காடு மாவட்டம், கடலூர் அருகில் அமைந்துள்ள திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவனாதன் ஆலயத்தில் வெகு அழகாகக் காட்சி தரும் ஸ்ரீராமன், இலக்குவன், சீதை மற்றும் ஹனுமானின் திவ்யமங்கள விக்ரஹங்களை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை என்று சொல்லலாம். தன் வாழ்நாளை திருவஹிந்திரபுரத்தில் அமைத்துக்கொண்ட வைணவ குல குருவான ஸ்வாமி தேசிகனின் ‘ரகுவீரகத்யம்‘ இந்த ராமரைப் பற்றியது என்கிறது வரலாறு.

திருச்சித்திரகூடம் (சிதம்பரம்)

‘’தில்லைநகர் திருச்சித்திர கூடம் தன்னில் திகழ்விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை’’ என்று குலசேகராழ்வாரின் இப்பாடல் மூலம் அவரின் ராமபக்தியைக் காணலாம். சொல்லின் செல்வனாகிய ஹனுமனையும் சேர்த்தே தன் பாடலில் போற்றியுள்ள ஆழ்வார் கோவிந்தராஜனை ஸ்ரீராமபிரானாகவே அனுபவிக்கிறார். தனது பெருமாள் திருமொழியில் கடைசிப் பத்துப் பாட்டில் இராமகாதையைப் பாடிய இவரின் பாடல்கள் ‘’தில்லை விளாகம்” என்ற ஊரில் கோயில்கொண்டிருக்கும் ராமனைப் பற்றியது என்பதும் சிலர் கருத்து. பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தில்லை விளாகம் ராமனின் வடிவழகு அற்புதமானது. இவரின் திருக்கால்கள் மனிதர் போன்றே உயிரோட்டமுள்ளவையாக அமைந்துள்ளன. இது ஒரு சிற்பமா அல்லது நிஜஸ்வரூபமா என்ற வியப்பை ஏற்படுத்தும். இதேபோன்று பாண்டிச்சேரியில் அருள்மிகு வரதராஜப் பெருமாளின் திருக்கோயிலில் காட்சி தரும் ஸ்ரீராமனும் அழகிய மேனியான். இந்த திவ்யமங்கள விக்ரஹங்கள் கடலிலிருந்து கிடைத்தவை என்று தெரிகிறது. ராம பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

புன்னைநல்லூர் (தஞ்சை)

அருள்மிகு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வடபுறம் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமன் சந்நதி பற்றி பலர் அறிந்திருக்கமாட்டார்கள். இத்திருக்கோயிலில் மூல மூர்த்திகள் சானக்கிராமத்தால் ஆனவை. நேபாள மன்னர், தஞ்சை மராட்டிய மன்னருக்கு அன்பளிப்பாக அளித்த மூர்த்தங்கள் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. மற்றும் மூல விக்ரகங்களில் ஹனுமனுக்குப் பதிலாக வானர மன்னன் சுக்ரீவன் அமைந்துள்ளார் என்றும் தெரிகிறது.

ஆனால், இதற்கான தக்க காரணங்களை அறியமுடியவில்லை. உத்ஸவ மூர்த்தங்கள் சுமார் 4 அடிக்கு மேற்பட்டதாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்கள். ராகவனின் திவ்ய திருமேனி ராமத்யான ஸ்லோகப்படி சிரித்த திருமுகமும் கோதண்டத்தின் லாவகமும் திருமேனியில் மூன்று வளைவும் கம்பீரத் தோற்றமும் பக்தர்களின் மனதைப் பரவசப்படுத்தும். ராமனின் வலது பக்கத்தில் ஜானகி, ஸாமுத்ரிகா லக்ஷணத்துடன் அடக்கமே வடிவமாக காட்சியளிக்கிறாள். இளைய பெருமாளின் சேவையும் விசேஷமாக உள்ளது. சிறிய திருவடி மிகச் சிறிய விக்ரஹமாக விநயபாவத்துடன் காட்சியளிக்கிறார். தஞ்சை செல்லும் அன்பர்கள் தவறாது இத்திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

கோதண்ட ராமனாகவே பல திருக்கோயில்களில் காட்சிதரும் ஸ்ரீராமன் இராமனாதபுரம் அருகில் அமைந்துள்ள திருப்புல்லாணி (சேதுக்கரை) திவ்ய தேசத்தில் இலங்கை செல்ல உதவிபுரிய மறுக்கும் சமுத்திர ராஜனிடம் கோபம் கொண்ட நிலையில் தர்ப்பையில் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரே தர்ப்பஸயன ராமர் எனப்படுகிறார். இதே திருக்கோயிலில் இலங்கை சென்று இராவணனை வென்று சீதையை மீட்டுத் திரும்பியதன் நினைவாக சீதாபிராட்டியுடன் கூடிய கோதண்ட ராமனாகவும் தனி சந்நதியில் காட்சி தருகிறார். ஆக, இத்திருக்கோயிலில் இரண்டு ராமர் சந்நதிகள் அமைந்துள்ளன.

கோதண்டராமனாகவே கண்டுகளித்த கண்களுக்கு பட்டாபிராமர் சேவை பற்றித் தெரிவிக்க வேண்டாமா! பட்டாபிராமருக்கும்ப் பல தனிக்கோயில்கள் உண்டு.திருவையாறு ஸ்ரீதியாகப்பிரம்மத்தின் பிருந்தாவனத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் புதாக்ரஹாரத்தில் ஸ்ரீராமன் பட்டாபிராமனாகக் காட்சி தருகிறான். இத்திருக்கோயிலில் ஸ்ரீபட்டாபிராமன் (மூலவர்) திருவடியைத் தாங்கும் பாவனையில் அனுமனின் திருவுருவம் அமைந்துள்ளது மிக அரிதான காட்சி. உத்ஸவ திவ்ய மங்கள விக்ரஹங்கள் வைதேஹி ஸஹிதம் என்ற ஸ்ரீராம தியான சுலோகப்படி ஸ்ரீபட்டாபிராமன் வீராசனமிட்டும் இடதுபுறம் ஸ்ரீசீதா தேவியுடன் இனிது வீற்றிருக்கிறான்.வியாக்யான முத்ரை என்ற தத்துவஞான முத்திரையுடன் ஸ்ரீஆஞ்சநேயர் மாமுனிவர்கள் ஆகியோருக்குப் பரதத்வஞான உபதேசம் செய்யும் நிலையிலும் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீலட்சுமணன் ஸ்ரீராமதனுஸ்ஸுடன் தனது தனுஸ்ஸையும் பின்புறம் தாங்கியும், சாமரம் வீசும் பாவனா திருக்கரத்துடன் ஸ்ரீபரதன் நின்ற திருக்கோலத்தில் குடைபிடிக்கும் நிலையிலும் இடது புறம் சத்ருக்னன் நின்ற திருக்கோலத்தில் சாமரம் வீசும் பாவனையிலும் ஸ்ரீஆஞ்சநேயர் மண்டியிட்டு ராமாயணப் புத்தகத்தை ஒரு திருக்கரத்தில் தாங்கியும் மற்றொரு திருக்கையில் ஜபமாலை வைத்திருக்கும் பாவனையிலும் மிக்க ஆச்சர்யமாக சேவை சாதிக்கிறார்கள். தியாகய்யாவின் பாடல்கள் அனைத்துமே இவரைப்பற்றி அமைந்தவை என்று செவிவழிச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புத திருத்தலம்.திருக்குடந்தை ராமஸ்வாமி கோயிலிலிருக்கும் மூலவர் பட்டாபிராமனாகப் பெரிய திருமேனியுடன் இளவல்களுடனும், சீதையை இடது மடியில் அமர்த்திக் கொண்டும் அற்புதமாகக் காட்சி தருகிறார். உத்சவ திவ்ய மங்கள விக்ரஹங்களின் அழகு சொல்லி மாளாது. நேரில் சென்று கண்டுகளிக்க வேண்டிய அற்புதமான காட்சி.

திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாளின் சந்நதியில் வனவாசராமர் என்ற திருநாமத்துடன் காட்சி தரும் ராமனை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.திருவிண்ணகர் என்ற ழைக்கப்படும் ஒப்பிலா அப்பன் சந்நதி. திருஇந்தளூர் பரிமளரங்கனாதன் சந்நதி கோதண்டராமர் கவிச் சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரெழுந்தூர் ஆமருவியப்பன் சந்நதியில் காட்சி தரும் கோதண்டராமன் என்று பல திருக்கோயில்களில் ஸ்ரீராமபிரானைத் தரிசித்து மகிழலாம். ‘`மனத்துக்கினியானை’’ என்று ஸ்ரீஆண்டாள் ராமனைப் போற்றுகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமனுக்குத் தனி சந்நதி அமைந்துள்ளது. ‘‘கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளங்கவர்ந்தானை அண்டர்கோன் அணியரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’’ என்று திருப்பாணாழ்வாரால் போற்றப்பட்ட ரங்கநாதன் இக்ஷ்வாகு குலத்தின் ஆராதனைத் தெய்வமான ராமனை, இக்ஷ்வாகு குல தனம் என்று ஸ்வாமி தேசிகன் போற்றுவார். அந்த இக்ஷ்வாகு குல வம்சத்தில் அவதரித்த ஸ்ரீராமனுக்கு இத்திருக்கோயிலில்

1) மேல் பட்டாபிராமன் சந்நதி
2) கீழ்பட்டாபிராமன் சந்நதிகளும் மற்றும் போஜராமர் என்ற ராமர்சந்நதியும் அமைந்துள்ளன.

ராமன் சந்நதியில் ராமபக்தனான குலசேகர ஆழ்வாரும் எழுந்தருளியிருக்கிறார். ராம ஜன்ம பூமியான அயோத்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ‘`அம்மாஜி மந்திர்’’ என்ற ராமர் சந்நதியில் தென்னாட்டுக் கோயிலைச் சேர்ந்த ராமனின் திருமேனிகள் காட்சி தருகின்றனர். தென்னாட்டு வழக்கப்படி பூஜைகள் நடந்துவரும் இச்சந்நதிக்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களும் மிக்க உதவியாய் உள்ளனர் என்றும் திருவிழாக் காலங்களிலும் முஸ்லிம் இனத்தவர்கள் கலந்துகொண்டு மகிழ்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. இச்சந்நதி இருமத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாய் இன்றும் விளங்குகிறது.சூடிக் கொடுத்தவளின் ‘`மனத்துக்கு இனியவனாக’’ அமைந்த ஸ்ரீராமனை அவள் வாக்குப்படியே ‘தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது ராமநாமத்தை வாயினால் பாடி ராமனை மனத்தினால் சிந்தித்தால்’, ‘போய் பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில்’ தூசாவது திண்ணம்.
ஜெய் ஸ்ரீராம்!

The post ராமன் எத்தனை ராமனடி appeared first on Dinakaran.

Tags : Ramanadi ,Shivaberuman Thiruvai ,Rama ,Narayan ,Srivishnu Sachranama ,Ramon ,
× RELATED இராமநதி அணையிலிருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை