பூந்தமல்லி: குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் போரூரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சென்னை வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூரில் அண்ணா சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி குடியிருப்புவாசிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக நாள்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை, அண்ணா சாலை மற்றும் மருத்துவமனை சாலை சந்திப்பில், 8 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இந்த சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதால் இந்த பள்ளம் விழுந்தது தெரியவந்தது. இதனால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சாலையில் தடுப்புகள் அமைத்து அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் குடிநீர் குழாயை சீர் செய்தனர். பின்னர், அந்த பள்ளத்தில் மண் கொட்டி நிரப்பி சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து சரியானது.
The post குடிநீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் போரூரில் திடீரென சாலையில் பள்ளம் appeared first on Dinakaran.